கணவன் மனைவி போல் சென்று, பூட்டிய வீடுகளை உடைத்துத் திருடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்த இரண்டு பேரை நேற்று (செப்டம்பர் 3) போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், பகல் நேரங்களில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உத்தரவின் பேரில் கருமத்தப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் இந்த கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.
**சந்தேகத்தின் பேரில் கைது**
நேற்று மதியம் தனிப்படை போலீசார் அன்னூர் அவிநாசி ரோட்டில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஒரு காரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது காரில் இருந்த ஒரு பெண்ணும் ஆணும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினர். இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரிக்கையில், அவர்கள் தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் என்றும், அந்தப் பெண் அதே பகுதியைச் சேர்ந்த அவரது காதலி சுகன்யா என்றும் தெரியவந்தது.
**விசாரணையில் உறுதி**
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்ததில், பகல் நேரங்களில் கணவன் மனைவி போலச் சென்று, பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர் என்பது தெரிய வந்தது. பிரவீன் குமாரும் சுகன்யாவும், ஏற்கெனவே திருமணமானவர்கள் என்பதும், இருவரும் தங்களது கணவன் மனைவிக்குத் தெரியாமல் காதலித்து வந்ததும், ஆடம்பரமாக வாழ்வதற்காக வீடு வாடகைக்குப் பார்ப்பது போலச் சென்று கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.
இவர்களிடம் இருந்து, அன்னூர் பகுதியில் திருடப்பட்ட 25 பவுன் நகை மற்றும் திருடிய பணத்தில் வாங்கப்பட்ட காரைப் பறிமுதல் செய்தனர் போலீசார். இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர்.
�,”