jசோலார் துறையில் பெருகும் வேலைவாய்ப்பு!

Published On:

| By Balaji

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் சோலார் துறையில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை 76 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு தேடுதல் தளமான இண்டீட், சோலார் துறையில் தேடப்படும் வேலைவாய்ப்புகள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சோலார் வடிவமைப்புப் பொறியாளர்கள், சோலார் திட்டப் பொறியாளர்கள் மற்றும் சோலார் மின்னணுப் பொறியாளர்கள் பணிக்கு அதிகப் பேர் விண்ணப்பிப்பதாகத் தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் நாடு முழுவதும் சோலார் பூங்காக்களை அமைப்பதற்கான மத்திய அரசின் திட்டம் விரிவுபடுத்தப்பட்டதால் சோலார் மின்னுற்பத்தி ஆலைகள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவின் மின்னுற்பத்திப் பிரிவில் சோலார் மிக முக்கியப் பங்காற்றுவதோடு கணிசமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் துறையாக உள்ளது.

2014 அக்டோபர் முதல் 2017 அக்டோபர் வரையில் சோலார் துறையில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை 76 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக இண்டீட் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், சோலார் மின்னுற்பத்திக்கு மாற்றாக உள்ள காற்றாலை மின்னுற்பத்தித் துறையில் வேலைதேடும் நடவடிக்கை வெறும் 28 சதவிகித வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளதாகவும் இந்த ஆய்வு வாயிலாகத் தெரியவந்துள்ளது. 2014ஆம் ஆண்டு முதலே இந்தியாவின் மின்னுற்பத்தித் துறை சிறப்பான வளர்ச்சியைக் கொண்டுள்ளதாகவும், இதனால் அதிக வேலைவாய்ப்புகளும் அத்துறையில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் இண்டீட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சஷி குமார், ஏசியன் ஏஜ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel