jசின்னதம்பியைப் பிடித்த வனத் துறையினர்!

Published On:

| By Balaji

கண்ணாடிபுத்தூர் வாழைத் தோட்டப் பகுதியில் இருந்த சின்னதம்பி யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்துள்ளனர் தமிழக வனத் துறையினர். அதனை லாரியில் ஏற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

கோயம்புத்தூர் மாவட்டம் தடாகம் வட்டாரத்தில் சுற்றியலைந்த சின்னதம்பி யானை கடந்த மாதம் வனத் துறையினரால் பிடிக்கப்பட்டது. அதன் கழுத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, டாப்ஸ்லிப் வனப் பகுதியில் விடப்பட்டது. அதன்பின், ஒரு வாரம் கழித்து மீண்டும் அங்கலக்குறிச்சி எனும் கிராமத்துக்குள் புகுந்தது சின்னதம்பி யானை. கடந்த 31ஆம் தேதி தொடங்கி இன்று (பிப்ரவரி 15) வரை அந்த யானை ஒவ்வொரு கிராமமாகச் சுற்றி வந்தது. ஜிபிஎஸ் கருவி மூலமாக அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர் தமிழக வனத் துறையினர்.

அதேநேரத்தில், தங்கள் விவசாய நிலங்களை சின்னதம்பி யானை நாசப்படுத்துவதாகப் புகார் தெரிவித்தனர் அப்பகுதி விவசாயிகள். இந்த யானையை கும்கி யானையாக மாற்றப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில், மீண்டும் ஊருக்குள் புகுந்த சின்னத்தம்பியைப் பிடித்து வனத் துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்க உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். இதையடுத்து, நேற்று (பிப்ரவரி 14) மாலை சின்னதம்பி யானையைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கினர் வனத் துறையினர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கண்ணாடிபுத்தூரில் சின்னதம்பி யானை இருந்து வந்தது. ஏற்கனவே மயக்க ஊசிகள் செலுத்தப்பட்டிருந்த நிலையில் அது வாழைத்தோப்புக்குள் சென்றுவிட்டது. இதனால், மீண்டும் மயக்க ஊசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இன்று (பிப்ரவரி 15) காலையில் கும்கி யானைகளைப் பயன்படுத்தி சின்னதம்பி யானையைப் பிடித்து, அதற்கு மயக்க ஊசி செலுத்தியது மருத்துவக் குழு.

யானையை ஏற்றுவதற்கான வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், வாழைத் தோட்டத்துக்கு நடுவில் இருக்கும் சின்னதம்பி யானையை வாகனத்தில் ஏற்றுவது சவாலான விஷயமாகக் கருதப்படுகிறது. கும்கி யானைகளுடன் அதனைச் சேர்த்து அழைத்துவரும்போது, வாழைத் தோட்டம் சேதமடையும் என்பதால் அப்பணிகள் தாமதம் ஆவதாகக் கூறப்படுகிறது.

யானையைப் பிடிக்கும்போது காயம் ஏதும் ஏற்படக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், எந்திரங்கள் ஏதும் பயன்படுத்த முடியாத சூழலும் நிலவுகிறது. சின்னதம்பி யானையின் மயக்கம் தெளிந்தபிறகே, கும்கி யானைகள் உதவியுடன் அது இழுத்துச் செல்லப்படும். தற்போது அந்த யானையின் உடலில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் கருவி அகற்றப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மணி நேரங்களில் அது வாகனத்தில் ஏற்றப்படும் என்று வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சின்னதம்பி யானை பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றப்பட்டு யானைகள் முகாமுக்குக் கொண்டு செல்லப்படும் என்று வனத் துறை அதிகாரி கணேசன் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். வேறு வழியில்லாத காரணத்தினாலேயே தற்போது இந்த யானையைப் பிடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். கடந்த 2 வார காலமாக சின்னதம்பி யானையால் ஏற்பட்ட பயிர்ச்சேதம் குறித்த இழப்பீடுகளை அரசு வழங்கும் என்றும் அவர் தன் பேச்சில் குறிப்பிட்டார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share