முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நிகழ்ந்த திருட்டு சம்பவம் தொடர்பாகப் பணிப் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரத்தின் இல்லம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பைகிராப்ட்ஸ் கார்டன் சாலையில் அமைந்துள்ளது. சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றுள்ள நிலையில், அவரது வீட்டில் இருந்த ரூ.1.10 லட்சம் பணம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பழங்கால நகைகள், மரகதம், மாணிக்கம் உள்ளிட்ட நகைகள் திருடு போயுள்ளதாக ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்கள் மீது சந்தேகம் இருப்பதாகப் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் வீட்டில் போலீஸார் நேரில் நடத்திய விசாரணையில் பீரோ உடைக்கப்படாமல் நகை, பணம் திருடு போனது தெரியவந்துள்ளது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் கடந்த வியாழக்கிழமை முகத்தை மறைத்துக்கொண்டு ஒருவர் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து சிதம்பரத்தின் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே, ப.சிதம்பரம் வீட்டின் அலுவல் மேலாளர் முரளி, காவல் துறையில் அளித்திருந்த புகாரை வாபஸ் பெற்றதாகத் தகவல் வெளியாகியது.
இந்த நிலையில், சிதம்பரம் வீட்டில் நிகழ்ந்த திருட்டு சம்பவம் தொடர்பாக தற்போது, வெண்ணிலா மற்றும் விஜி ஆகிய இரு பணிப்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பணம், நகைகள் மற்றும் ஆறு பட்டுப்புடவைகள் மீட்கப்பட்டுள்ளன.
�,”