jகோவை: சிறு தொழிலைப் பாதிக்கும் மின் தடை!

Published On:

| By Balaji

முன்னறிவிப்பு இல்லாத மின் தடைகளால் கடந்த மூன்று மாதங்களாகவே கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறு, குறு தொழில் துறையினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.

கோயம்புத்தூரில் மதியம் மற்றும் மாலை நேரங்களில் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரையில் மின் தடை ஏற்படுவதாகவும், இதனால் இயந்திரங்களைச் சரியாக இயக்க முடியாமல் தொழில்கள் முடங்குவதாகவும் கோவை மாவட்ட சிறு மற்றும் குறு தொழில் துறையினர் கூறுகின்றனர். வேலாண்டி பாளையம், சாய்பாபா காலணி மற்றும் பெரிய நாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் மே 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் முன்னறிவிப்பு இல்லாமல் மின் தடை செய்யப்பட்டதாகத் தமிழ்நாடு குடிசை மற்றும் சிறு தொழில் கூட்டமைப்பின் கோவை மாவட்டத் தலைவர் *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

கோவையில் பெரும்பாலான சிறு தொழில் நிறுவனங்கள் சி.என்.ஜி. மற்றும் தானியங்கி இயந்திரங்களையே பயன்படுத்துவதாகவும், மின் தடைகளால் கருவிகள் பழுதடைந்து உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதாகவும், தொழிலாளர்களின் ஈடுபாடு குறைவதாகவும் அவர் கூறுகிறார். வேலாண்டி பாளையத்தில் ஆட்டோமொபைல் பாகங்கள் உற்பத்தி நிறுவனம் ஒன்றை நடத்தும் எஸ்.ரவிக்குமார் பேசுகையில், “சென்ற வாரம் மதிய நேரத்தில் முன்னறிவிப்பு இல்லாமல் ஏற்பட்ட மின் தடையால் கருவிகள் பழுதடைந்துவிட்டன. அதேபோல, தொழிலாளர்களுக்கான ஊதியமும் வீணாகிவிட்டது” என்று கவலை தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட சிறு தொழில் துறையினர் இந்த விவகாரம் குறித்து மின்சார வாரியத்திடம் முறையிட்டுள்ளனர். ஆனால், மழை மற்றும் காற்று காரணமாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இதுபோல மின் தடை அடிக்கடி ஏற்படுவதாக மின்சார வாரியம் காரணம் தெரிவித்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share