கொரோனா பரவலைத் தடுப்பதற்காக டாஸ்மாக் கடைகளை மூட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது
கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பேருந்துகள், பேருந்து நிலையங்களில் கிருமி நாசினி தெளித்தல், மருத்துவமனைகளில் தனி வார்டு அமைத்தல் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதுபோன்று கொரோனாவை தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோய் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு, கொரோனா அறிகுறியுடன் இருப்பவர்கள் மருத்துவமனைகள், அரசிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். தேவைப்பட்டால் குறிப்பிட்ட இடங்களில் இருக்கும் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களை மூடவும், ஓரிடத்தில் அதிகமானோர் கூடுவதற்கு தடை விதிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உண்டு என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு, மதுக்கடைகளை மூட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், சென்னையில் நெருக்கமான தெருக்களில் டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதுபோன்ற டாஸ்மாக் கடைகள், பார்கள் ஆகியவை சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வருகின்றன. இதனால் கொரோனா வைரஸ் பரவ 90 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. எனவே டாஸ்மாக் கடைகளை மூட அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதிகப்படியான மக்கள் டாஸ்மாக் கடையிலிருந்து வருவதால் குடும்பத்தினருக்கும் சுற்றுப்புறச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும். கடைகளில் கைகளைக் கழுவுவதற்குத் தேவையான தண்ணீர் வைக்கவும் நடவடிக்கை எடுக்கவும், கொரோனா பாதித்து பலியானவர்களுக்கான இழப்பீட்டை ரூ.10 லட்சமாக அதிகரிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனுவை இன்று (மார்ச் 16) விசாரித்த நீதிமன்றம், கொரோனா பரவலைத் தடுக்க டாஸ்மாக் கடைகளில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பி இந்த மனு தொடர்பாகத் தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
**-கவிபிரியா**�,