கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு மனித தவறுகளே காரணம் என்று எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம்சாட்டியுள்ளார்.
கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். நூற்றுக் கணக்கான மக்கள் உயிரிழந்தனர். 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். கேரள வெள்ளப் பாதிப்பை அதிதீவிர இயற்கைப் பேரிடர் என மத்திய அரசு அறிவித்தது.
இந்தச் சூழலில் இதுவரை ஆளும் கட்சியை பற்றி விமர்சிக்காமல் பேரிடரை எதிர்கொள்வதில் இணைந்து நின்ற எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா, மனித தவறுகளாலே வெள்ளம் ஏற்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 22) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடர் என்றும் இதற்கு அரசே முழுபொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சரியான முன்னறிவிப்பின்றி அணைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டன. அணைகள் திறக்கப்படுவதால் ஏற்படும் நிலைமை குறித்த எந்தவித ஆய்வும் இல்லாமல் இதை செய்துள்ளனர். 1924 ஆம் ஆண்டைக் காட்டிலும் குறைவான மழைதான் பெய்திருக்கிறது. எனினும் அதிகளவு பாதிப்புகள் ஏற்பட்டதற்குக் காரணம் அணைகள் திறப்புதான் என்று தெரிவித்துள்ளார்.
இடுக்கி அணையின் மொத்த கொள்ளளவு 2,403 அடி. ஜூலை 15 ஆம் தேதி அணை 90 சதவிகித கொள்ளளவை எட்டியது. ஜூலை 31 ஆம் தேதி 2395.68 அடியைத் தொட்டது. அப்போதே சோதனை முறையாக அணை திறக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் எம்.எம்.மணி தெரிவித்தார். ஆனால் ஆகஸ்ட் 9ஆம் தேதி அணை 2,398 அடியை எட்டிய பிறகு தான் முதல் மதகைத் திறந்தனர். அதன் பிறகு வேறு வழியின்றி அணையின் அனைத்து மதகுகளையும் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் திறந்து விட்டனர் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
அணைகள் திறக்கப்படுவதற்கு முன்பு ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா,. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எங்கே? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் ரமேஷ் சென்னிதலா.
“ஒகி புயல் பாதிப்பில் இருந்து கேரள அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. முதல்வர் பினராயி விஜயன் வல்லுநர்களைக் கொண்டு பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் அதற்கான கோப்புகள் அனைத்தும் அவரது அலுவலகத்திலேயே உள்ளது. இதிலிருந்தே இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடர் என்று தெரிகிறது.
முறையான நெறிமுறை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் வெள்ள பாதிப்பை குறைத்திருக்கலாம்” என்று குறிப்பிட்ட ரமேஷ் சென்னிதலா 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான உம்மன் சண்டி ஆட்சியில் பருவமழை காலத்தின் போது இடுக்கி அணை நிரம்பியது. அப்போது இடுக்கி அணை திறந்துவிடப்படவில்லை, அதற்குப் பதிலாக மற்ற சிறிய அணைகள் திறக்கப்பட்டன. தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து நீதி விசாரணை நடத்தி அதற்குக் காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த கேரள மின்சார வாரிய தலைவர் என்.எஸ்.பிள்ளை ‘‘ஒரே சமயத்தில் அணையின் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டதால் வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அதற்கு நிர்வாகம் காரணம் அல்ல’’ என்று தெரிவித்தார்..
வருவாய்த்துறை அமைச்சர் சந்திரசேகரன் ‘‘இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல. அதற்குப் பதிலாக அரசு செய்து வரும் நிவாரணப் பணிகளில் தோள் கொடுப்பது தான் அரசியல் கட்சிகளுக்கு அழகு’’ என்று கூறியுள்ளார்.
அணை பாதுகாப்பு ஆணைய தலைவர், ஓய்வு பெற்ற நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயர், “இந்த விவகாரம் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் எழும் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் உண்மை என்று நான் நம்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
�,”