கூட்டுறவுத் துறையில் தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.3 கோடி வரை மலிவான கடன்களை வழங்க புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் கூட்டுறவு மற்றும் விவசாயத் துறையில் புதிதாகத் தொழில் தொடங்கவும், புதிய முயற்சிகளை மேற்கொள்ள இளைய தலைமுறையை ஊக்குவிக்கும் வகையிலும் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் பயன்பெற விரும்பும் கூட்டுறவு நிறுவனம் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது நஷ்டமின்றிச் செயல்பட வேண்டும். மேலும் நிறுவனங்களின் திட்டச் செலவுகள் ரூ.3 கோடிக்கு மேல் இல்லாமல் இருப்பது அவசியம். அதன்படி அசல் தொகையைக் கணக்கில் கொண்டு இரண்டு வருடங்களுக்குக் கடன் தவணை தள்ளுபடி செய்யப்பட்டு, நிறுவனங்கள் மேற்கொள்ளும் திட்டங்களையும், அவை ஈட்டும் வருமானத்தையும் பொறுத்து கடன் தவணை முறை மாற்றி அமைக்கப்படும்.
நிறுவனங்கள் மேற்கொள்ளும் திட்டத்தின் செயல்முறைக்கான கடன் வசதி முறையில் 2 சதவிகிதத்திற்கும் குறைவான வட்டியுடன் கடன் வழங்கப்படும். இந்தச் சலுகையானது காலம் தவறாமல் வட்டி செலுத்துவோருக்கு மட்டுமே பொருந்தும். வடகிழக்கு மாநிலங்களில் நிதி ஆயோக் மூலம் ’புதிய இந்தியா’ திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கும், பெண்களையும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரையும் முழுமையாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் முழுமையாகப் பயன்பெற முடியும். இந்தத் திட்டம் ரூ.1000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள கோ – ஆப்பரேட்டிவ் ஸ்டார்ட் அப் மற்றும் இன்னோவேசன் பண்ட் (CSIF) திட்டத்தோடு இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.�,