Jகி.ரா.வின் காதல் அனுபவங்கள்!

Published On:

| By Balaji

காதலர் தினமான இன்று (பிப்ரவரி 14) கரிசல் இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தனது காதல் அனுபவங்களைப்பகிர்ந்துகொண்டுள்ளார்.

காதலர் தினமான இன்று பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். சிலர் தங்களது காதல் அனுபவங்களை கவிதை, கட்டுரை,கதை ஆகியவற்றின் வடிவில் பகிர்ந்துவருகின்றனர். அந்த வகையில் எழுத்தாளர் கி.ரா.வும் தனது காதல் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். ஆவணப்பட இயக்குநரும் புகைப்படக் கலைஞருமான புதுவை இளவேனில் கி.ராவின் காதல் அனுபவங்களை வீடியோ வடிவில் தனது ஃபேஸ்புக்கில் இன்று (பிப்ரவரி 14)வெளியிட்டுள்ளார்.

அந்த [வீடியோவில்](https://www.facebook.com/100000369050575/videos/1742669729088645/) “காதல் என்பது ஒரு காலத்தில் புனிதமாகவும், அடேயப்பா என்றுஆச்சரியப்படும் ஒன்றாகவும் இருந்தது. அதே சமயம் நினைத்து நினைத்து உருகக்கூடிய ஒன்றாகவும் இருந்தது” என்கிறார் கி.ரா.

தன்னுடைய காதல் அனுபவங்களைக் குறித்துத் தெரிவித்த அவர், “என்னுடய வாழ்க்கையில் அப்படி ஒரு நிகழ்வு; பெண் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் வந்துவந்து போனதே தவிர பெர்மனண்டா நிக்கல” என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார்.

என்னுடைய வாழ்க்கையில் கணக்கு வழக்கு இல்லாத பெண்கள் வந்து சென்றுள்ளார்கள் எனக் கூறும் அவர், “அந்த சம்பவங்கள் அத்தனையையும் நினைத்துபார்க்கும்போது அது காதலாகத் தெரியல. ஆனால் அந்த பெண்களுக்கு என்ன பற்றி எப்படி இருக்கும்னு தெரியல. அதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவும் முடியல.ஆனால் மறக்க முடியாத பெண்கள்னு இருக்கிறார்கள். ஆனால் அதைக் காதலென்று எப்படிச் சொல்வது எனத் தெரியவில்லை. எனக்குப் பல விஷயத்திலும்நிறைய அனுபவங்களைத் தந்த சில பெண்கள் இருக்கிறார்கள். அவர்களை என்னால் மறக்க முடியவில்லை” என்று தான் அறிந்த பெண்களை ஆச்சரியத்துடன்நினைவு கூறினார் .

“காதலியைப் பார்ப்பதற்கு ஏங்குறதும் காணாமலே போறாளே என தவிக்கும் சம்பவங்களும் என் வாழ்க்கையில் கொஞ்சம்தான். ஆனால் காதலர் தினம்என்றாலே எனக்கு சிரிப்புத்தான் வருகிறது” எனச் சொல்லிச் சிரிக்கிறார்.

காதல் சம்பவங்களைப் பற்றி கனிகள் என்ற பெயரில் நாவல் எழுதவிருப்பதாக முன்பு சொல்லிக்கொண்டே இருந்தேன் எனக் கூறும் அவர், “அந்த நாவல் பற்றி வல்லிக்கண்ணனும் ஜெயகாந்தனும் அடிக்கடி விசாரிப்பர்கள். ஆனால் என்னால் எழுத முடியவில்லை. இப்போது எழுத நினைத்தாலும் அது முடியவில்லை.ஏனென்றால் அதில் எழுதுவதற்கு என்ன இருக்கிறது என்கிற மனநிலையே இப்போது ஏற்படுகிறது” என்கிறார்.

காதலை இனிப்புப் பலகாரமென வருணிக்கும் கி.ரா., “அதீதமான இனிப்புப் பலகாரங்கள் என்று சில இருக்கின்றன. ஆனால் அதை அதிகமாகச் சாப்பிட முடியாது.அதே சமயம் இனிப்பு இல்லாமலும் இருக்க முடியாது” என நம் வாழ்வில் காதலுக்கான இடத்தை வருணிக்கிறார்.

“காதல் என்பது உடல் ரீதியானதல்ல மன ரீதியானது” என்கிறார் முத்தாய்ப்பாக.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share