எடை குறைக்க உதவும் இடியாப்பம்!
சங்க காலத்திலேயே இடியாப்பம் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ‘இடி’ என்றால் நெல்லிலிருந்து தயாராகும் மாவு, அதில் செய்யப்படும் அப்பம் என்பது இதன் பொருள். உணவுத் துறையில் வளர்ந்துவரும் முக்கியமான தொழிலாக உருவெடுத்துவிட்டது இடியாப்ப விற்பனை.
தினை, வரகரிசி, சோளம், கம்பு, கேழ்வரகு எனச் சிறுதானியங்களில் செய்து ருசி பார்க்கும் அளவுக்கு இடியாப்பத்தின் மகத்துவம் இன்றைக்கு அனைவரும் உணர்ந்த ஒன்றாகிவிட்டது. அந்த வகையில் இன்றைய ஸ்பெஷல் கேழ்வரகு இடியாப்பம்.
**என்ன தேவை?**
கேழ்வரகு மாவு – 400 கிராம்
கல் உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
**செய்முறை:**
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து நன்கு சூடேறியதும் கேழ்வரகு மாவைப் போட்டு வாசனை வரும் வரை நன்கு வறுக்கவும். பின், அதை இறக்கி நன்கு ஆறவிடவும். தேவையான அளவு கல் உப்பை இரண்டு டம்ளர் தண்ணீரில் சேர்த்துச் சூடேற்றவும். தண்ணீர் கொதித்ததும் இறக்கி விடவும். வறுத்து ஆறவிட்ட கேழ்வரகு மாவில் உப்பு சேர்த்த சுடுநீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்துப் பிசையவும்.
மொத்த மாவினையும் சப்பாத்தி மாவு பதத்துக்குத் திரட்டவும். இம்மாவினை தேவையான அளவு எடுத்து இடியாப்பக் குழலில் இட்டு இட்லித் தட்டில் இடியாப்பமாகப் பிழியவும். பின் இதனை இட்லிப் பானையில் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
சுவையான கேழ்வரகு இடியாப்பம் தயார்.
**என்ன பலன்?**
கேழ்வரகு , சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மைகொண்டது, இதில் உள்ள வைட்டமின் இ சருமத்துக்கு நல்லது. இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் சீரான செரிமானத்துக்கு உதவுகிறது; கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்; உடல் எடை கூடுவதைத் தவிர்க்கும்; நீரிழிவு உள்ளவர்களுக்கும் நல்லது.�,