ஊரே அடங்கியிருக்கும். ஆனா எனக்கு மட்டும் ஓய்வில்லை. துவைக்கணும், காய வைக்கணும், வீட்டைச் சுத்தப்படுத்தணும், சமைக்கணும், பாத்திரம் தேய்க்கணும் எனப் புலம்புகிறவர்களுக்கு இந்தக் கறிவேப்பிலைக் குழம்பு மிகப் பெரிய வரப்பிரசாதம். அதிகளவில் செய்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்துகொண்டால், நிச்சயம் மூன்று நாள்கள்வரை கெடாமல் இருக்கும். ‘வீட்டிலிருந்தே ஸ்ட்ரெஸ் அதிகமாயிடுச்சு’ என இனி ஃபீல் பண்ண வேண்டாம். இதில் கறிவேப்பிலை அதிக அளவில் உபயோகப்படுத்தியிருப்பதால், அதிகப்படியான மன அழுத்தத்தைக் குறைக்கும். மேலும், இரும்புச்சத்து உள்ளிட்ட ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்த எளிமையான ரெசிப்பியும்கூட.
என்ன தேவை?
உருவிய கறிவேப்பிலை – 2 கப்
புளி – ஒரு எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு
வறுத்து அரைக்க:
உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
மிளகு – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6 – 8
தனியா – ஒரு டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
நெய் அல்லது எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
வறுப்பதற்குத் தேவையான பொருள்களை ஒவ்வொன்றாக வறுத்தெடுத்துக்கொள்ளவும். பிறகு, வறுத்த பொருள்களோடு பச்சை கறிவேப்பிலையைச் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம் சேர்த்துத் தாளித்து, கரைத்த புளியை அதில் சேர்க்கவும். உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை சுமார் ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். அரைத்த கறிவேப்பிலை விழுதை இத்துடன் கலக்கவும். நன்கு கொதித்து, தேவையான பதம் வந்த பிறகு இறக்கிவிடலாம். விருப்பப்பட்டால், புளியின் அளவைக் குறைத்து அதற்குப் பதிலாக மாங்காய் சேர்த்தும் இந்தக் குழம்பைச் செய்யலாம்.�,