கலைஞர் நினைவிடத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
திமுக தலைவர் கலைஞர் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் அண்ணா சமாதி அருகே கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. கலைஞரின் நினைவிடத்துக்கு அரசியல் பிரமுகர்கள், கலைத்துறையினர் பொதுமக்கள் ஆகியோர் தினமும் அஞ்சலி செலுத்தியபடி உள்ளனர்.
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஆகஸ்ட் 22) இரவு 8 மணியளவில் தனது குடும்பத்தினருடன் மெரினாவுக்கு வந்து கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். மு.க. தமிழரசு, செல்வி, முரசொலி செல்வம் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
முன்னதாக, மாநிலங்களவை உறுப்பினரும், திமுகவின் மகளிரணிச் செயலாளருமான கனிமொழி தலைமையில் திமுக மகளிர் அணியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலைஞரின் நினைவிடத்தில் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
**திருப்பி அனுப்பப்பட்ட கலைஞரின் சிலை**
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தைச் சேர்ந்த சிலை வடிவமைப்பாளர் முருகன் என்பவர், கலைஞரின் நினைவிடத்தில் வைப்பதற்காக இரண்டு சிலைகள் கொண்டு வந்தார். நினைவிடத்தில் சிலைகளை வைக்க அனுமதி பெற வேண்டும் என்பதால், சிலைகள் காவல் துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டன.
இதுகுறித்து சிலை வடிவமைப்பாளர் முருகன் கூறுகையில் “கருணாநிதியின் உருவத்தில் எட்டு சிலைகள் செய்துள்ளேன். உட்கார்ந்திருப்பது போலவும், நிற்பது போலவும், நின்று கொண்டு கையை உயர்த்திக் காண்பிப்பது போலவும் வித்தியாசமான முறைகளில் சிலைகளைச் செய்துள்ளேன். அனைத்தும் பைபரில் செய்யப்பட்ட சிலைகள். உட்கார்ந்திருக்கும் சிலை செய்வதற்கு ஒன்றரை லட்ச ரூபாயும், நிற்கும் சிலை செய்வதற்கு எண்பதாயிரம் ரூபாயும் செலவானது. இந்தச் சிலைகள் செய்வதற்கு 25 நாள்கள் தேவைப்பட்டது” என்று தெரிவித்தார்.�,”