உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் வங்க தேச அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் கடுமையான நெருக்கடி கொடுத்த ஆஃப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 31ஆவது ஆட்டத்தில் நேற்று (ஜூன் 24) வங்கதேச அணியை எதிர்கொண்டது. ஆஃப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தது. வங்கதேச அணியின் துவக்க வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கத் தவறியதால் நிலைத்து நின்று ஆடி ரன் சேர்க்கும் பொறுப்பு சகிப் அல் ஹசனுக்கும் முஷ்பிகுர் ரஹிமுக்கும் வந்தது. ஷகிப் அல் ஹசன் 51 ரன்களில் ஆட்டமிழக்க கடைசி வரை நிலைத்து நின்று ஆடிய ரஹிம் 83 ரன்கள் எடுத்தார். வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்தது. ஆஃப்கானிஸ்தான் அணித் தரப்பில் அதிகபட்சமாக முஜிபுர் ரஹ்மான் 3 விக்கெட் எடுத்தார்.
மிதமான இலக்கு என்பதால் ஆஃப்கானிஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் நிதானமாகவே ஆடி ரன் சேர்த்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடினாலும் எந்தவொரு வீரரும் கடைசி வரை நின்று ஆடவில்லை. ஷகிப் அல் ஹசனின் துல்லியமான பந்துவீச்சால் ஆஃப்கானிஸ்தான் அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்து 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஆஃப்கானிஸ்தான் அணியில் சமியுல்லா சென்வாரி அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். பேட்டிங்கில் அரைசதம் கடந்ததோடு, அபாரமாகப் பந்துவீசி 5 விக்கெட் வீழ்த்திய ஷகிப் அல் ஹசன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்
�,”