நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் 9 சதவிகிதம் மட்டுமே பெண் நீதிபதிகள் இருப்பதாக, சமீபத்தில் வெளியான புள்ளிவிவரமொன்றில் தெரிய வந்துள்ளது.
2017ஆம் ஆண்டு இந்திய நீதித் துறையின் பொற்காலம் என்று அத்துறையினரால் கூறப்படுகிறது. அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாட்டின் முக்கிய நான்கு உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள் தலைமை நீதிபதிகளாக இருந்தனர். மும்பை உயர் நீதிமன்றத்தில் மஞ்சுளா செலூரும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜி.ரோகிணியும், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நிஹிதா நிர்மலா மத்ரேயும், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திரா பானர்ஜியும் தலைமை நீதிபதிகளாக இருந்தனர். 2017 ஏப்ரல் 13ஆம் தேதி நீதிபதி ரோகிணியும், செப்டம்பர் 19ஆம் தேதி மத்ரேவும், டிசம்பர் 4ஆம் தேதி செலூரும் ஓய்வுபெற்றனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர், நீதிபதி இந்திரா பானர்ஜி உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். தற்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் தஹில்ரமணியும், காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் கீதா மிட்டலும் தலைமை நீதிபதிகளாக உள்ளனர்.
இந்தியாவில் 24 உயர் நீதிமன்றங்கள் இருக்கின்றன. அவற்றில், 1,221 நீதிபதிகள் இருக்க வேண்டிய இடத்தில், 891 நீதிபதிகள் மட்டுமே பதவியில் உள்ளனர். 891 பேரிலும், 81 பேர் மட்டுமே பெண்கள். கடந்த ஆண்டில் மட்டும் 20க்கும் அதிகமான பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் 7க்கும் மேற்பட்டவர்கள், இன்னும் சில ஆண்டுகளில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படவுள்ளனர். தற்போது, உயர் நீதிமன்றங்களில் 9 சதவிகிதப் பெண்கள் மட்டுமே உள்ளனர்.
1959ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதியன்று, முதல்முறையாக அன்னா சாண்டி என்ற பெண் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.�,