jஇலங்கை துறைமுகமும் சீனாவின் நோக்கமும்!

public

ஆண்டுக்குச் சராசரியாக 60 ஆயிரம் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் வழியாகச் செல்கின்றன. இதில் ஏறக்குறைய எந்தக் கப்பலும் சரக்குகளை இறக்குவதற்காக அங்கு நிறுத்தப்படுவதில்லை.

கடந்த 2010ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்தது. எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இங்கு பெரிதாக எவ்வித சரக்குப் போக்குவரத்தும் நடைபெறாமலேயே உள்ளது. இந்தத் துறைமுகத்தைக் கட்டுவதற்காகப் பெரிய அளவில் இலங்கை சீனாவிடம் கடன் வாங்கியிருந்தது. தற்போது கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் சீனாவுக்கு 99 ஆண்டுகள் துறைமுகத்தை இலங்கை குத்தகைக்கு விட்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் அம்பாந்தோட்டை துறைமுகம் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.

தற்போது இந்தத் துறைமுகத்துக்காக 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை சீனா செலவிடத் திட்டமிட்டுள்ளது, துறைமுகத்தை தங்களின் மூலோபாய சொத்தாக மாற்றி ராணுவப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த முயல்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், கடந்த டிசம்பர் மாதம் முதல் துறைமுகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள China Merchants Port Holdings Company Ltd என்ற சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனம், இந்தச் சந்தேகங்களைப் பொய் என நிரூபிக்க விரும்புகிறது.

China Merchants Group, தனது நீண்ட அனுபவத்தின் வாயிலாக இந்தத் துறைமுகத்தை லாபகரமானதாக மாற்றத் திட்டமிட்டுள்ளது.

துறைமுகத்துக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை தற்போது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக அதன் முதன்மை இயக்க அதிகாரி தெரிவித்துள்ளார். எனினும், தனது சக போட்டியாளர்களான சிங்கப்பூர், மலேசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் போன்று வளர்ச்சியை அடைய அம்பாந்தோட்டை துறைமுகம் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையிலும், தினமும் ஒரு கப்பலை மட்டுமே அம்பாந்தோட்டை துறைமுகம் கையாளுகிறது. சரக்குகளைக் கையாள்வதில் முன்னணியில் உள்ள முதல் 40 முனையங்களுக்கான ஐநாவின் பட்டியலிலும் இத்துறைமுகம் இடம்பிடிக்கவில்லை.

இலங்கை தலைநகர் கொழும்பு வழியாக தங்களின் சரக்குகளைக் கையாளும் முக்கிய ஷிப்பிங் நிறுவனங்கள், தற்போது தங்களின் பாதையை மாற்ற முனைப்பு காட்டுகின்றன. சரக்குப் போக்குவரத்து சேவையில் முன்னணியில் உள்ள மேர்ஸ்க் நிறுவனம், அம்பாந்தோட்டை துறைமுகம் தனது வாடிக்கையாளர்களுக்கு நிறுவன மதிப்பீடு வழங்க வேண்டும் என்பதற்காகக் காத்திருக்கிறது.

இந்த நிலையில், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பலவீனமான செயல்திறன், முக்கிய வர்த்தகப் பாதைகளையும் சர்வதேச விநியோகச் சங்கிலிகளையும் பெறுவதற்கான சீனாவின் பரந்த மூலோபாய நலன்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துறைமுகத்தின் போக்குவரத்தைச் சீரானதாக மாற்ற பில்லியன் டாலர் கணக்கில் முதலீடு செய்ய வேண்டும் என மதிப்பிடுகிறார், சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பல் போக்குவரத்து ஆய்வாளரான ராகுல் கப்பூர். “சீனாவின் உலகளாவிய கடற்படை மேலாதிக்கத் தேடலுக்கான சிறந்த எடுத்துக்காட்டுதான் அம்பாந்தோட்டை. எதிர்வரும் காலத்தில், வணிக நிலைத்தன்மை மீதான மூலோபாய அழுத்தமாக இது இருக்கும்” என்றும் அவர் எச்சரிக்கிறார்.

தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே பல்வேறு விவாதங்களை இந்தத் துறைமுகம் உருவாக்கிவருகிறது. முன்னாள் அதிபர் ராஜபக்ஷே, சீனாவின் கடனுதவியுடன் இந்தத் துறைமுகம் அமைக்கும் திட்டத்தைத் தொடங்கினார். இதன் ஒரு பகுதியாகக் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தில் தற்போதும் ஒரு விமானம் மட்டுமே தினசரி பயணத்தை மேற்கொண்டுவருகிறது.

இதற்கிடையே அம்பாந்தோட்டை துறைமுகத்தை ராணுவ நோக்கத்துக்காகப் பயன்படுத்த முயலவில்லை என்று சீனா கூறியுள்ளது.

சமீபத்தில் செய்தியாளர்கள் மாநாடு ஒன்றில் பேசிய சீனாவின் வெளிவிவகார அமைச்சகத்தின் பேச்சாளர் ஹுவாசுனிங், இலங்கையும் சீனாவும் பரஸ்பர நன்மை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் துறைமுகத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் எனத் தெரிவித்துள்ள அவர், இந்தத் திட்டம் சிறப்பான விதத்தில் முன்னெடுக்கப்படுவதை உறுதிசெய்வது குறித்து இரு நாடுகளும் உறுதியாக உள்ளன எனவும் தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகம் பாதுகாப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம் என்பது குறித்த ஊகங்களை சிலர் வெளியிடவேண்டிய தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய இலங்கை அரசும் துறைமுகத்தை ராணுவப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த அனுமதியளிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளபோதிலும், குத்தகை காலம் 99 ஆண்டுகள் என்பதால், அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த சர்ச்சைகள் இப்போதைக்கு முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *