உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதக் காலத்துக்கு நீடிப்பு செய்வதற்கான சட்ட மசோதா நேற்று ஜூன் 24ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது..
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிவடைந்த பின்னர் உள்ளாட்சித்துறை மற்றும் சத்துணவுத்துறை போன்றவைகளின் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதையடுத்து, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவி காலத்தை வருகிற ஜூன் 30ஆம் தேதி முதல் மேலும் ஆறு மாத காலத்துக்கு நீடிப்பு செய்வதற்கான சட்ட மசோதாவைத் தாக்கல் செய்தார்.
அதில் சட்டசபை தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி உள்ளாட்சி அமைப்புகளுக்காக புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, சரிபார்க்கும் பணி விரைவில் முடிக்கப்படும். வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய துணை வாக்காளர் பட்டியலை உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு உள்ளது. இந்த வழக்கு ஜூலை மாதத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் மனு நிலுவையில் உள்ளதைக்கருதி மாநில தேர்தல் ஆணையம் கலந்து ஆலோசனை செய்ய வேண்டி இருப்பதால் தனி அதிகாரிகளின் பதவி காலத்துக்கு நீட்டிப்பு செய்ய அரசை கேட்டுக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது.
அதையடுத்து, அந்த மசோதா குறித்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, அதில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. முன்னதாக, உள்ளாட்சித் தேர்தல் தாமதத்துக்கான காரணம் குறித்து, அமைச்சர் வேலுமணி பேசுகையில், ‘உள்ளாட்சித் தேர்தல் நடத்தத் தடை ஏற்பட்டதுக்கு திமுக-வே காரணமாகும். உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு அதிமுக தயாராக இருந்தபோது, நீதிமன்றத்துக்குச் சென்று தடை வாங்கியது திமுக-தான். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடப்பதால், அதன் தீர்ப்பு வந்த பிறகே தேர்தல் நடத்தப்படும்’ என்று அமைச்சர் கூறினார்.
அதையடுத்து, தனி அதிகாரிகளின் பதவி காலம் நீடிப்பு மசோதாவுக்கு ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று அவை வெளிநடப்பு செய்தனர்.�,