jஇன்னிக்கே வெள்ளிக்கிழமையை வரச் சொல்லு!

Published On:

| By Balaji

ஒரு கப் காபி

வயதானவர்களுக்கே வண்ணங்களைப் பார்த்தால் கொண்டாட்ட மனநிலை வந்துவிடுகிறது. இப்படியிருக்க மழலைகளுக்கும், குழந்தைகளுக்கும் சொல்லவா வேண்டும்?

அழகிய மணவாளனின் பள்ளியில் வாரத்தில் திங்கள் முதல் வியாழன் வரை சீருடை நாட்கள். வெள்ளிக்கிழமை மட்டும் சீருடை அல்லாத வண்ண ஆடைகள் உடுத்தி வரலாம். சீருடை என்றால் அரக்கு நிறக் கால்சட்டை, வெள்ளைச் சட்டை. அதை இன் செய்து, கறுப்பு நிற ஷூ போட்டுக்கொண்டு அதிகாரபூர்வ மாணவன் என்ற தோற்றத்தில் செல்ல வேண்டும். ஆனால் வெள்ளியென்றால் மாணவர்களுக்கு வண்ணச் சிறகு முளைத்துவிடும்.

திங்கள் முதல் சீருடைப் பயணத்தைத் தொடங்கும் அழகிய மணவாளன், புதன்கிழமை காலையிலிருந்து, ‘அம்மா… இன்னிக்கு வெள்ளிக்கிழமையா?’, ‘அப்பா… வெள்ளிக்கிழமை எப்ப வரும்?’ என்ற கேள்விகளை வீச ஆரம்பித்துவிடுவார்.

இன்னும் இரண்டு நாட்கள் இருக்கு, இன்னும் மூணு நாட்கள் இருக்கு என நாங்கள் சொல்லும் கணக்குகள் எல்லாம் அவருக்குக் கசக்கும். ஒருநாள் புதன்கிழமை காலையில் விழிப்புற்ற அடுத்த நொடியே, ‘அப்பா… இன்னிக்கு வெள்ளிக்கிழமையா?” என்று மெல்லச் சிணுங்கினார். ‘இன்னும் ரெண்டு நாட்கள் இருக்குப்பா’ என்றேன். அடுத்த அதிரடியாக, ‘என்னப்பா நீ? இன்னிக்கே வரச் சொல்லு வெள்ளிக்கிழமையை’ என்றார் உத்தரவு தொனியில். காரணம் வண்ண உடைகளை உடுத்துவதில் இருக்கும் ஆர்வம்தான்.

பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவுடனேயே வண்ண உடைகளை உடுத்திக்கொண்டாலும் பள்ளி செல்லும்போது வண்ண உடைகளை உடுத்துவதில் அவ்வளவு ஆர்வம் குழந்தைகளுக்கு. ஒருநாள் சீருடையை அணிவித்துக்கொண்டே மணவாளனிடம் கூறினேன், ‘ஏம்ப்பா… இதோ இருக்கே அரக்கும் ஒரு நிறம் தான். வெள்ளையும் ஒரு நிறம்தான். இதையும் ஆசையா போட்டுட்டுப் போலாமே?’ என்று. அதற்கு மணவாளன் கேட்ட பதில், ‘சரி… அப்படின்னா வெள்ளிக்கிழமையே வரக்கூடாது… சரியா?’ என்பதுதான்

குழந்தைகளின் வண்ணக் கொண்டாட்டங்களை ஊக்குவிக்கிறேன். அதேநேரம் அவர்களுக்கு என சில அமைக்கப்பட்டிருக்கும் சில நிபந்தனைகளைப் பழகிக்கொள்ளவும் பக்குவப்படுத்துகிறேன். வெள்ளையும் ஒரு வண்ணம்தான் என்ற எண்ணத்தை அழகிய மணவாளனிடம் இப்போதே ஏற்படுத்த வேண்டியதில்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய வைக்க முயற்சி செய்கிறேன்.

வெள்ளையும் வண்ணங்களில் ஒன்றுதான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினால், வெள்ளியும் இன்னொரு நாள்தான் என்ற பக்குவமும் ஏற்பட்டுவிடும்.

அதெல்லாம் போகப் போக நடக்கும். ஆனால் புதன்கிழமையே வெள்ளிக்கிழமையை வரச் சொல்லி ஆணையிட்டுவிட்டார் அழகிய மணவாளன். வண்ண வெள்ளியே சீக்கிரம் வா…

**- ஆரா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share