நூறு நாடுகளைச் சேர்ந்த சுமார் இரண்டு லட்சம் கணினிகளில் ‘வான்னா க்ரை’ என்ற ரான்சம்வேர் தாக்குதல் சமீபத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஐ.டி. நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள், வங்கிகள் போன்றவை பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்தத் தாக்குதலால் அதிகம் பாதிப்படைந்த மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் சுமார் 40 ஆயிரம் கணினிகள் இந்தத் தாக்குதலில் பாதிப்படைந்துள்ளன.
சைபர் தாக்குதல்கள் குறித்து தெரிவிப்பதில் இந்திய வங்கிகள் மற்றும் நிறுவனங்களிடையே வெளிப்படைத்தன்மை குறைவாகவே உள்ளது. எனினும் ஒரு சில வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் இதுகுறித்து தெரிவித்துள்ளன. இதற்கு முன்பாகவே இந்திய கணினிகள் தாக்குதலுக்கு உள்ளானாலும் தற்போது பணத்தை முக்கிய குறிக்கோளாக வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கேஸ்பர்ஸ்கை லேப்பின் தெற்காசிய நிர்வாக இயக்குநர் அல்டாஃப் ஹால்டி கூறுகையில், “நாங்கள் நடத்திய ஆய்வில், இந்தியாவில் வான்னா க்ரை (Wanna Cry) தாக்குதல் பெரிய அளவில் நடந்துள்ளது. தாக்குதல் அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் தற்போதும் இந்த தாக்குதலால் பாதிப்படையும் நிலையில் உள்ளன. இந்தியாவின் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தற்போதும் பழைய காலாவதியான ஓ.எஸ். தான் பயன்படுத்துகின்றன. இது, இணைய தாக்குதல் நடத்துபவர்களுக்கு எளிதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் மேற்கு வங்கத்தில்தான் அதிகளவு கணினிகள் ரான்சம்வேர் தாக்குதலால் பாதிப்பைச் சந்தித்துள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் ஹேக்கர்கள் கேட்ட தொகையைச் செலுத்தி தங்களின் தகவல்களை மீட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.�,”