Jஅரசியல் படத்தில் மோகன்லால்

Published On:

| By Balaji

இயக்குநர் கே.வி.ஆனந்துடன் நடிகர் சூர்யா மூன்றாவது முறையாகக் கூட்டணி அமைத்து ‘காப்பான்’ படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். ஆர்யா, மோகன்லால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பிரதமர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். பிரதமரைப் பாதுகாக்கும் அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. நியூயார்க், பிரேசில், டெல்லி, சண்டிகர், ஹைதராபாத் எனப் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

மலையாளத்தில் மோகன்லால் நடித்துள்ள லூசிஃபர் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், தொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், விவேக் ஓபராய் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். அரசியல் த்ரில்லர் கதைக்களம் கொண்ட இந்தப் படம் வர்த்தக அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் மார்ச் 28ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது. மலையாளத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை, இருவர், ஜில்லா ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தவர் மோகன்லால். மொழி உள்ளிட்ட படங்களால் தமிழில் பிரபலமானவர் பிரித்விராஜ். மாரி 2 படத்தால் தொவினோ தாமஸும், விவேகம் படத்தால் விவேக் ஓபராயும், சர்வம் படத்தால் இந்திரஜித்தும் தமிழில் பிரபலமடைந்தனர். வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் மூலம் மஞ்சு வாரியர் தமிழில் அறிமுகமாகவிருக்கிறார். தமிழிலும் லூசிஃபர் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share