}தேர்தல் ஆணையத்தில் அமமுக பதிவு செய்யப்பட்டது!

Published On:

| By Balaji

தேர்தல் ஆணையத்தால் அமமுக அரசியல் கட்சியாக நேற்று பதிவு செய்யப்பட்டது.

2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரையில் அமமுக கட்சியை ஆரம்பித்த தினகரன், இரட்டை இலை தொடர்பான வழக்கின் காரணமாக அதை அரசியல் கட்சியாகத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை. மக்களவைத் தேர்தலில் சின்னம் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால் அமமுகவைக் கட்சியாகப் பதிவு செய்கிறோம் என்று தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்தது.

அதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் சென்னை அசோக் நகரில் தினகரன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமமுகவைக் கட்சியாகத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முடிவெடுக்கப்பட்டது. அமமுகவின் பொதுச் செயலாளராக தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர் பதவி சசிகலாவுக்காக காலியாக வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

கட்சியைப் பதிவு செய்வது தொடர்பாக அமமுக தரப்பிலிருந்து நாளேடுகளில் விளம்பரமும் செய்யப்பட்டது. அமமுகவைப் பதிவு செய்ய ஆட்சேபனை தெரிவித்து அதிமுக தரப்பிலிருந்தும் மேலும் மூன்று மனுக்கள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக நடந்த விசாரணையில் ஆட்சேபங்களுக்கு உரிய விளக்கங்களை அளித்ததாக அமமுக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.

இதனிடையே உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவந்ததால், கட்சிப் பதிவு தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த தினகரன், “அமமுக விரைவில் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டுவிடும். இல்லையெனில் உள்ளாட்சித் தேர்தலிலும் சுயேச்சையாக வேட்பாளர்களைக் களமிறக்குவோம்” என்று தெரிவித்திருந்தார். ஆனால், அதற்கு இடமளிக்காத வகையில் தேர்தல் ஆணையத்தால் அமமுக பதிவு செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ஊடகத்தினருக்கு நேற்று (டிசம்பர் 7) தகவல் தெரிவித்த அமமுக தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், “அமமுகவைப் பதிவு செய்வதற்கான ஆவணங்களை நாங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தோம். பதிவு செய்வதற்கு அதிமுக மற்றும் இன்னும் சில கட்சிகளில் இருந்து ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதற்கான உரிய விளக்கங்களை அளித்தோம். இரண்டு முறை விசாரணைக்கு அழைக்கப்பட்டபோதும், சரியான ஆவணங்களை நாங்கள் சமர்ப்பித்தோம்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “இந்த நிலையில் அமமுக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலைத் தேர்தல் ஆணையத்தில் எங்களை ஒருங்கிணைக்கும் வழக்கறிஞர் தெரிவித்தார். அமமுக பதிவு செய்யப்பட்ட விவரங்களைத் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் வெளியிடும். அமமுகவின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தொடர்ந்து செயல்படுவார். தமிழகத்திலுள்ள தேசிய, மாநில மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் அட்டவணையில் அமமுகவும் இடம்பெற்றுள்ளது. இதனால் மற்ற கட்சிகளுக்கு என்ன அங்கீகாரமும், சட்ட உரிமைகளும் அளிக்கப்பட்டிருக்கிறதோ அவை அமமுகவுக்கு இனி வழங்கப்படும்” என்றும் தகவலைத் தெரிவித்தார்.

இதன்மூலம் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அமமுக பொதுச் சின்னத்தில் போட்டியிடும் என்பது தெளிவாகியுள்ளது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel