�
தமிழ்நாட்டில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைகளைக் கொண்டாடுவதற்காக, சென்னையிலிருந்து அதிக அளவிலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும்போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேவேளையில் ஆம்னி பேருந்துகள், இந்த நேரத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன. பலமுறை எச்சரிக்கை விடுத்தும் இந்தப் பிரச்சினைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில் ஆயுதபூஜை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 20ஆம் தேதிவரை ஆம்னி பேருந்துகளில் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் சரக அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று, விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மற்றும் தமிழ்நாட்டிற்குரிய வரி செலுத்தாத பேருந்துகள் சிறை பிடிக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 1800 4256151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
**-வினிதா**
�,