ஐந்து ஏக்கர் கொண்ட விவசாயிக்கு ரேஷன் அரிசி கிடையாதா?

Published On:

| By Balaji

அரசு ஊழியர்கள், அதிக வருமானம் பெறுபவர்கள், 5 ஏக்கர் நிலம் உள்ள விவசாயிகளுக்கு இலவச ரேஷன் அரிசி கிடையாது என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்தியை நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி மற்றும் குறைந்த விலையில் அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒன்றிய மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கும், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் மேல் பெறும் குடும்பங்களுக்கும், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும், மூன்று அறைகள் கொண்ட கான்கிரீட் வீட்டில் குடியிருப்பவர்களுக்கும், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது என்ற தகவல் சமூக வலைதளங்களில் சமீப காலமாக அதிகளவில் பரவி வருகிறது.

இதற்கு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் விளக்கமளித்துள்ளார்.

அதில், ”எந்த பாகுபாடுமின்றி தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ரேஷன் பொருட்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பொய்யாக பரப்பப்படும் தகவல்களை நம்ப வேண்டாம். அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களும் இலவச அரிசி மற்றும் பொது விநியோகத் திட்டத்தில், தற்போது மானிய விலையில் பெற்று வரும் அனைத்துப் பொருட்களையும் தொடர்ந்து பெற்று பொது விநியோகத் திட்டத்தின் பலன்களை பெறலாம். பொது விநியோகத் திட்டத்தின் பலன்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை . சமூக வலைதளங்களில் பரவி வரும் இதுகுறித்த செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share