�சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து சென்ற சிறுவனைப் பாராட்டி திருச்சி மாநகர காவல் ஆணையர் பரிசு வழங்கி கெளரவித்துள்ளார்.
இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது, ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்திவருகிறது. இதை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இருப்பினும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இதை பின்பற்றுவதில்லை. இதனால், பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
தேர்தல் நேரம் என்பதால், திருச்சியில் பல்வேறு இடங்களில் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீஸார் சோதனை பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக திருச்சி மல்லிகாபுரத்தைச் சேர்ந்த சாமியப்பன் (12) என்ற சிறுவன் ஹெல்மெட் அணிந்துக் கொண்டு சைக்கிளில் செல்வதைப் பார்த்த போலீசார், சிறுவனை நிறுத்தி விசாரித்துள்ளனர். அதற்கு, தான் ஆறாம் வகுப்பு படிப்பதாகவும், கடைக்குப் பொருட்கள் வாங்க செல்வதாக கூறிய சிறுவன், தலைக்கவசம் அணிந்தால்தான் உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கூறினான்.
இந்த சிறுவனை பற்றி அறிந்த திருச்சி மாநகரக் காவல் ஆணையர் லோகநாதன், சிறுவனையும், அவனது பெற்றோரையும் கமிஷனர் அலுவலகத்துக்கு வரவழைத்து பாராட்டியுள்ளார். சிறுவனின் செயலைப் பாராட்டும்விதமாக புது சைக்கிள், ஹெல்மெட் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார். மேலும், சிறுவனுக்கு ‘நற்கருணை வீரன்’ என்ற சான்றிதழும் வழங்கப்பட்டது.
**-வினிதா**
�,