சிறப்புக் கட்டுரை: சூத்திரர்களுக்கு ஆன்மீகக் குடியுரிமையும், முஸ்லிம்களுக்கு தேசியக் குடியுரிமையும்

Published On:

| By Balaji

காஞ்சா அய்லய்யா ஷெப்பர்ட்

**தமிழாக்கம்: எஸ்.வி.ராஜதுரை**

பார்ப்பனிய இந்து மதத்தின் குழந்தையான இந்துத்துவம், வரலாற்று ரீதியாக சூத்திரர்களுக்கு ஆன்மீகக் குடியுரிமையை மறுத்து வந்துள்ளது. இப்போது அது முஸ்லிம்களுக்கு தேசியக் குடியுரிமையை மறுக்க முடிவு செய்துள்ளது. பார்ப்பன/பனியா சக்திகள், இந்தியாவிலுள்ள வெவ்வேறு பிரிவினருக்கு வெவ்வேறு விதங்களில் அடிப்படையான குடியுரிமையை மறுப்பதன் மூலம் இந்தியாவின் அனைத்துப் பிரிவு மக்களின் மீதும் தம் இரும்புப் பிடியைக் கொண்டு தம் அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்ள விரும்புகின்றன. இந்து ஆன்மீக அமைப்பின் வழியாக சூத்திரர்களுக்கும் தலித்துகளுக்கும் அவர்களது அடிப்படை உரிமைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே மறுக்கப்பட்டு வந்துள்ளது. இப்போது இந்துத்துவச் சிந்தனையின் மூலம் பார்ப்பனர்களும் பனியாக்களும் ஒரு தேசிய வேலைத் திட்டத்தின் மூலம் முஸ்லிம்களைத் துரத்திச் செல்கின்றனர். இந்தத் திட்டத்தில் சூத்திரர்களுக்கும் தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் ஏதும் கிடைக்கப்போவதில்லை. ஆனால் அவர்களது ஆள்பலம் முஸ்லிம்களுக்கு எதிராகப் போராடுவதற்கும் அவர்களது வாக்கு பலம் பார்ப்பன/பனியா/சத்திரியர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் பயன்படுத்தப்படும்.

2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம், ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து மட்டுமே முஸ்லிம்கள் இந்தியாவில் குடியேறுவதைத் தடை செய்கிறது. ஏன், இந்த மூன்று நாடுகள் மட்டும்? இதர நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம்களுக்கு ஏன் இந்தத் தடை இல்லை? காரணம் என்னவென்றால், இந்த மூன்று நாடுகளும் இந்துத்துவ அகண்ட பாரதத்தின் பகுதிகள். பார்ப்பன/பனியா/சத்திரிய ஆதிக்கத்தின் கீழ் மிகப் பெரும்பான்மையினராக இருந்திருக்கக்கூடிய சூத்திரர்கள், தலித்துகள், பழங்குடியினர் ஆகியோரை இஸ்லாம் தன்னிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டது என்று இந்துத்துவம் இன்றும் கருதிக் கொண்டிருக்கிறது. இவர்கள் எல்லோரும் இஸ்லாத்திற்குச் சென்று, மதக் கருத்தியல், தத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த தங்கள் சொந்த தேச அரசுகளை செதுக்கி எடுத்துக்கொண்டனர். இந்த மூன்று நாடுகளிலிருந்து பல பத்தாண்டுகளாகவே பார்ப்பனர்கள்/பனியாக்கள் ‘இந்துக்கள்’ என்ற தலைப்பின் கீழ் இந்தியாவிற்கு புலம் பெயர்ந்துள்ளனர். வட இந்தியாவில் அவர்கள் மிகச் சிறந்த மூலவளங்களைப் பெற்றுக்கொண்டனர். இத்தகையவர்களில் பெரும்பாலோர், மத்திய அரசாங்கத்தின் உதவியுடன் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட கல்வியைப் பெற்று அதிகாரிவர்க்கம், அரசியல் , இன்ன பிறவற்றுக்குள் நுழைந்துள்ளனர். பாகிஸ்தானிலிருந்து வந்த இத்தகைய தலைவர்களில் ஒருவர் எல்.கே.அத்வானி (சிந்து மாகாணத்தைச் சேர்ந்த பனியா). அவர் ஆர்.எஸ்.எஸ்/பாஜக ஆகியவற்றைச் சுற்றி பனியாக்களை ஒழுங்கமைத்தார். எல்.கே.அத்வானியின் சீடர்களான ( இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்ற சான்றிதழுடன்) மற்றொரு பனியாவான நரேந்திர மோடியும் அமித் ஷா என்ற சமண பனியாவும் தங்கள் சொந்த சக்திகளை (பனியாக்களை) இன்னொரு மட்டத்தில் அணி திரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் என்ற முறையில் மோகன் பகவத்தும் இந்தியாவின் ஆட்சியாளர்கள் என்ற முறையில் மோடியும் அமித் ஷாவும், தங்கள் கட்சியைத் தம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொண்டு ஒரு திட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த மூன்று நாடுகளிலிருந்தும் வந்த முஸ்லிம் அல்லாத, தாழ்ந்த சாதியைச் சேர்ந்த உழைப்பாளி மக்கள் உழைப்பு முகாம்களில் வைக்கப்பட்டனர்.

ஒவ்வொருவருக்கும் ஆன்மீக, சமூக, அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டு எல்லா சாதிகளுக்குமிடையில் சமத்துவம் இருக்க வேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை. இந்தியத் துணைக் கண்டத்தில் இஸ்லாம் பரவியதற்கான மூலகாரணமாக இருந்த சாதியை ஒழிப்பதைப் பற்றி இன்றும் கூட சங் பரிவாரம் விவாதிப்பதில்லை. இன்றுங்கூட சூத்திரர்கள்/தலித்துகள்/ பழங்குடியினர் ஆகியோருக்கு இந்துயிசத்தில் அடிப்படையான ஆன்மீகக் குடியுரிமை இல்லை. ஆர்.எஸ்.எஸ்./பாஜக சக்திகள் சூத்திரர்கள், இதர பிற்பட்ட வகுப்பினர் ஆகியோரின் உழைப்புச் சக்தியைக் கொண்டு பிரமாண்டமான ராமர் கோவிலைக் கட்ட முயற்சி செய்து வருகின்றன. ஆனால் இந்த சூத்திரர்களும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் அந்தக் கோவிலில் புரோகிதர்களாக முடியாது.

இன்றும் கூட ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வலைப்பின்னலாகத்தான் இருந்து வருகின்றது. பாஜக, பார்ப்பன/பனியாக் கட்டுப்பாட்டிலுள்ள அரசியல் அமைப்புதான். ஹெட்கெவர், கோல்வால்கர், ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீன்தயாள் உபாத்யாய முதல் அடல் பிகாரி வாஜ்பாயி வரை பார்ப்பனியம் தனது மேலாதிக்கத்தை ஆர்.எஸ்.எஸ்./பாஜக கட்டமைப்புகளின் மீது நிறுவியுள்ளது என்பதை இந்த தேசம் அறியும். இப்போது பார்ப்பன/ பனியா கூட்டணி தெளிவாக வரையறுக்கப்பட்ட ஒரு குறிக்கோளுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் சூத்திரர்கள்/இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ பழங்குடியினர் ஆகியோரில் ஒருவர்கூட எந்தவொரு பார்ப்பன/பனியா தலைமைத் தகுதிக்கு வர அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும் பெரும்பாலான சூத்திரர்களும்/தலித்துகளும்/பழங்குடியினரும் முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பி விடப்படுகின்றனர். அவர்களும் முஸ்லிம்கள் தங்கள் எதிரிகள் என்று நினைக்கிறார்கள்.

இந்த நிலைமைக்கு இந்தியாவிலுள்ள முஸ்லிம் மேற்குடியினரும்கூடப் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் பெரும்பாலும் உயர் சாதிகளிலிருந்து முஸ்லிம்களாக மதம் மாறியவர்கள்தான். முகமது அலி ஜின்னா குஜராத்தி பனியா சாதியிலிருந்தும் அல்லாமா இக்பால் காஷ்மிர் பார்ப்பன சாதியிலிருந்தும் இஸ்லாத்துக்கு மதம் மாறியவர்கள் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.இப்போது காங்கிரஸுடன் சேர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் முஸ்லிம் தலைவர்களில் பலர் பார்ப்பனக் குடும்பங்களிலிருந்து முஸ்லிம்களாக மதம் மாறியவர்கள். ஆனால் முஸ்லிம் வெகுமக்களோ பொருளுற்பத்தி செய்யும் சாதிப் பின்னணியைக் கொண்டவர்கள்.

ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவற்றிலிருந்து இந்துக்கள் என்ற தலைப்பின் கீழ் பார்ப்பன/ பனியாக்கள் இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்த முறை, 1990களில் காஷ்மிரில் நிகழ்ந்ததை ஒத்ததுதான். இந்துக்கள் என்ற தலைப்பின் கீழ் அங்கிருந்து எல்லா பண்டிட்டுகளும் இந்தியாவிற்குள் புலம் பெயர்ந்தனர். இன்று ஆஃப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இந்துக்கள் என்ற பெயரில் இருப்பவர்கள் யார், அவர்களின் சமூகத் தகுதி என்ன என்பது- அவர்களுக்கு சிறுபான்மைத் தகுதி கொடுக்கப்பட்டுள்ளது என்பதைத் தவர- யாருக்கும் தெரியாது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் வரையறுப்பது போல, ‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள்’ என்பவர்கள் மேற்சொன்ன மூன்று நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்து இந்தியக் குடிமக்களாவார்களேயானால், அவர்களுக்கு சாதித் தகுதி ஏதேனும் தரப்படுமா, இல்லையா? அவர்கள் எல்லோரும் தாங்கள் பார்ப்பனர்கள் அல்லது பனியாக்கள் அல்லது சத்திரியர்கள் என்று கூறிக்கொண்டால் அவர்களுக்குத் தானாகவே ஆன்மீக சமத்துவ அந்தஸ்து தரப்பட்டுவிடும். ஆனால் ஹரப்பா நாகரிகத்தைக் கட்டும் காலம் தொட்டு இந்தியாவிலேயே வாழ்ந்து வருகின்ற சூத்திரர்கள்/ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/பழங்குடியினர் ஆகியோர் இந்த அந்தஸ்தை விரும்பினால் அது அவர்களுக்கு வழங்கப்படாது. இதுதான் சாதியும் இந்துயிசமும் ஆகும்.

இந்துயிசத்துக்குள் இருக்கிற சூத்திரர்களுக்கு ஆன்மீகக் குடியுரிமை இல்லை. இதர பிற்பட்ட வகுப்பினர் ஒருபுறமிருக்கட்டும் – சத் சூத்திரர்கள் என அழைக்கப்படும் ஜாட்டுகள், பட்டேல்கள், குஜ்ஜார்கள், மராத்தாக்கள், யாதவர்கள், ரெட்டிகள், கம்மாக்கள், லிங்காயத்துகள், ஒக்கிலியர்கள், நாயக்கர்கள், நாயர்கள் ஆகியோருக்கும் கூட ஆன்மீகக் குடியுரிமை இல்லை. மேற்கு வங்கத்தில், வங்காள விவசாய சமுதாயங்களாகவும், பெரும்பாலும் சூத்திரர்களாகவும் இருக்கிற மக்களுக்கும் ஆன்மீக உரிமைகள் இல்லை. அவர்களால் இந்துயிசத்தில் புரோகிதராவதற்கோ, தத்துவத் தகுதி பெறுவதற்கோ ஆசைப்பட முடியாது. ஆர்.எஸ்.எஸ்./பாஜக இந்தப் பிரச்சினையை விவாதிக்கவே விரும்பாது. ஏனெனில் இந்த விவாதம் முரண்பாடு ஏற்படும் நிலையை உருவாக்கி பார்ப்பனிய மேலாதிக்கத்தைத் தூக்கியெறிவதில் போய் முடியும்.

முஸ்லிம்களின் குடியுரிமைப் பிரச்சினை என்பது சூத்திரர்/ தலித்துகளின் ஆன்மிகக் குடியுரிமைப் பிரச்சினை என்பதுடன் இணைக்கப்பட்டாக வேண்டும். இத்தகைய பரந்த சமத்துவத்தை அரசியல் சமுதாயத்தில் முஸ்லிம் மேற்குடியினர் ஆதரிக்கிறார்கள் என்றால், ஆன்மீக சமத்துவம் என்பது அடிப்படைப் பிரச்சினை என்பதை அவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.

இந்திய முஸ்லிம்கள் இந்திய சமுதாயத்தின் சாதித் தன்மையை ஒருபோதும் புரிந்துகொண்டதில்லை; நவீன காலத்தில் அவர்கள் தீண்டாதோருடனும் சூத்திரர்களுடனும் சேர்ந்து நிற்கவில்லை. இந்திய முஸ்லிம்களின் அறிவாளிகள், தலைவர்கள் ஆகியோரின் கண்களுக்கு சாதியும் வர்க்கமும் தெரியவேயில்லை. அவர்கள் தங்கள் மத நிறுவனவாதத்துக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருந்தனர்.

இந்துத்துவ சக்திகளும் வகுப்புவாத முஸ்லிம்களும் நீண்டகாலம் கலவரச் செயல்களிலேயே கட்டுண்டு கிடந்தனர். வகுப்பு உரிமைகளைவிட ஜனநாயக உரிமைகள் மேலும் முக்கியமானவை என்று அம்பேத்கர் திரும்பத் திரும்ப அவர்களிடம் கூறிவந்த போதிலும் முஸ்லிம்கள் ஜனநாயகரீதியான அணிதிரட்டலின் முக்கியத்துவத்தை உணரவில்லை. முதல் முறையாக அவர்கள் அதை இப்போது உணர்ந்துள்ளனர். இப்போதேனும் அவர்கள் இந்துத்துவ பார்ப்பனியத்துக்கு எதிராக முரணற்ற அடிப்படையில் ஜனநாயகரீதியான அணிதிரட்டலின் முக்கியத்துவத்தை உணர்ந்தாக வேண்டும்.

சூத்திரர்/ இதர பிற்பட்ட வகுப்பினர்/பழங்குடியினர் ஆன்மீக சமத்துவத்தைப் பெறுவார்களேயானால், அவர்கள் இந்து கட்டமைப்புகள் உள்ளிட்ட ஒவ்வொரு நிறுவனத்தின் மீதும் கட்டுப்பாடு செலுத்துவார்களேயானால் இந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கோ, வேறு ஏதேனும் மதத்திற்கோ மதம் மாறுதல் என்ற அச்சம் போய்விடும். ஆனால் சூத்திரர்/இதரபிற்பட்ட வகுப்பினர்/பழங்குடியினர் ஆன்மீகக் குடியுரிமை பெறுவதை பார்ப்பன/பனியா சக்திகள் விரும்பாது. ஏனெனில் அப்படி விரும்பினால், அவர்களது ஆன்மீக, சமுதாய, அரசியல் மேலாதிக்கம் தகர்ந்துவிடும். ஆன்மீக ஜனநாயகம் நிறுவப்பட்டு, இந்து ஆன்மீக அமைப்பின் மீது சூத்திரர்கள்/தலித்துகள். பழங்குடியினர் கட்டுப்பாடு செலுத்துவார்களேயானால், அவர்களிடையே முஸ்லிம்-விரோத சிந்தனை இருக்காது. ஏனெனில் அவர்களும் முஸ்லிம்களும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் உணவுக் கலாசசாரத்தைப் பொறுத்தவரை அவர்களிடையே பொதுத்தன்மை இருக்கிறது. பிறகு இந்தியப் பார்ப்பனியம் அதற்குரிய இடத்தில் வைக்கப்பட்டுவிடும்.

**கட்டுரையாளர் குறிப்பு**

1.காஞ்சா அய்லய்யா ஷெப்பர்ட், இந்தியாவின் தலைசிறந்த சமூகவியல் சிந்தனையாளர்களில் ஒருவர்; இந்திய சமுதாயம், சாதிப் பிரச்சினை, மக்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் முதலியன தொடர்பாகப் பல நூல்களை எழுதியுள்ளவர்; மனித உரிமைச் செயல்பாட்டாளர்; ஒஸ்மானியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். Countercurrents.org என்னும் ஆங்கில டிஜிட்டல் ஏட்டில் 23.12.2019இல் வெளியான அவரது ஆங்கிலக் கட்டுரையில் சில வாக்கியப் பிழைகள் இருந்தன. அவரது சிந்தனையோட்டத்தை அறிந்து, இந்தத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share