ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி அமெரிக்க சிறப்புப் படையினரால் வடமேற்கு சிரியாவில் ’தைரியமான இரவுநேர தாக்குதலில்’ கொல்லப்பட்டார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க நேரப்படி நேற்று அக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமை காலை அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு சில மணித்துளிகளுக்கு முன்னால், ‘மிகப்பெரிய ஒன்று நடந்திருக்கிறது’ என்று சஸ்பென்ஸ் ட்விட் வெளியிட்ட டிரம்ப் தாக்குதல் சம்பவத்தின் முழு விவரங்களையும் தனது வெள்ளை மாளிகையில் இருந்து பார்த்திருக்கிறார். அதன் பிறகு அல் பாக்தாதியின் டி.என்.ஏ. ரிப்போர்ட் உறுதி செய்யப்பட்ட பிறகே வழக்கத்துக்கு மாறாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் டிரம்ப்.
அமெரிக்காவுக்கு எதிராக உலகின் பல இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தி வரும் ஐஎஸ் ஐ எஸ் இயக்கத்தினர் சிரியாவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். ஐஎஸ் இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி சிரியாவில்தான் வசித்து வருகிறார். அவர்களுக்கு எதிராக சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. சிரிய நாட்டுப் படைகளோடு அமெரிக்க, ரஷ்ய, துருக்கி உள்ளிட்ட பல நாட்டுப் படைகள் இணைந்து ஐஎஸ் இயக்கத்துக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
சிரியாவின் வடமேற்கே இத்லிப்பில், அல் பாக்தாதி பதுங்கி இருக்கிறார் எனக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல் பாக்தாதியை குறிவைத்து இரு வாரங்களுக்கு முன் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதல் திட்டம், நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு பாரிஷா என்ற கிராமத்தில் முடிந்தது.
“அபுபக்கர் அல் பாக்தாதி அமெரிக்கப் படைகளின் முற்றுகையில் ஒரு முட்டுச்சந்தான சுரங்கப்பாதை
யில் சிக்கி சிணுங்கினார், அழுதார், கதறினார். அந்த சுரங்கப்பாதையின் முடிவை எட்டியபோது அல்-பாக்தாதி தன்னுடன் மூன்று இளம் குழந்தைகளை இழுத்துச் சென்றார். கடைசியில் பயங்கரவாதத் தலைவர் தற்கொலை உடையை வெடிக்கச் செய்தபோது அந்தக் குழந்தைகளும் அல்-பாக்தாதியுடன் சேர்ந்து இறந்தனர்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
அல்-பாக்தாதியின் இரண்டு மனைவிகளும் இறந்தனர் என்று அவர் குறிப்பிட்டார். அவர்கள் இருவரும் வெடிக்காத தற்கொலை உடையை அணிந்திருந்ததாக டிரம்ப் கூறினார்.
அல்-பாக்தாதியின் உடல் குண்டுவெடிப்பால் சிதைக்கப்பட்டது, ஆனால் உடனடியாக நடத்தப்பட்ட டி.என்.ஏ சோதனை அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தியது என்றும் டிரம்ப் கூறினார்.
ஒரு நாயைத் தவிர இந்த நடவடிக்கையில் எந்த அமெரிக்க உயிரும் இழக்கப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்று கூறிய டிரம்ப், தாக்குதல் நடந்த வளாகத்தில் இருந்து பதினோரு இளம் குழந்தைகள் வெளியேற்றப்பட்டனர் என்றும் தன் உரையில் குறிப்பிட்டார்.
அல்- பாக்தாதி தனது கடைசி தருணங்களை முழு அச்சத்துடனும், முழு பீதியுடனும், கழித்ததாகவும், அமெரிக்கப் படைகள் அவரைத் தாக்குவதைக் கண்டு பயந்துபோனதாகவும் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சோதனையின் விளைவாக, சிறப்புப் படைகள் ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றிய மிக முக்கியமான தகவல்களை மீட்டெடுக்க முடிந்தது, அவை அந்த அமைப்பின் எதிர்கால திட்டங்களுடன் தொடர்புடையவை. ஊடகவியலாளர்கள் ஸ்டீவன் சோட்லோஃப் மற்றும் ஜேம்ஸ் ஃபோலி உள்ளிட்ட அப்பாவி அமெரிக்கர்கள் ஐ எஸ்.ஐ.எஸ்ஸால் கொல்லப்பட்டதையும் டிரம்ப் குறிப்பிட்டார் .
இந்த நடவடிக்கையில் ரஷ்யா, துருக்கி, சிரியா மற்றும் ஈராக் ஆகியவற்றின் ஒத்துழைப்புக்கு ட்ரம்ப் வெளிப்படையாக நன்றி தெரிவித்ததோடு, ‘அல் பாக்தாதி இன்னொரு அப்பாவி ஆணையோ, பெண்ணையோ, குழந்தையையோ ஒருபோதும் கொலை செய்ய மாட்டார். அவர் ஒரு நாயைப் போலவே இறந்தார். அவர் ஒரு கோழை போல் இறந்தார். உலகம் இப்போது மிகவும் பாதுகாப்பான இடமாக உள்ளது. கடவுள் ஆசீர்வதிக்கட்டும்”என்று தன் உரையை முடித்தார் டிரம்ப்.
ஐஎஸ் ஐஎஸ் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி ஏற்கனவே சிலமுறை கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால், இம்முறை அமெரிக்க அதிபரே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதால் இந்த சம்பவம் உலக அளவில் முக்கியமானதாகப் பேசப்படுகிறது. மேலும் ரஷ்யா இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், “அமெரிக்காவின் அறிவிப்பு பற்றி ரஷ்ய பாதுகாப்புத் துறைக்கு இன்னும் நம்பகமான தகவல் கிடைக்கவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறது.
அண்மையில் இலங்கையில் நடந்த சர்ச் தாக்குதல் உள்ளிட்ட பல தாக்குதல்களில் தொடர்புடையதாக ஐஎஸ் இயக்கம் மீது குற்றப் பட்டியல்கள் நிறைய இருக்கின்றன. தமிழகத்தில் கூட ஐ எஸ் இயக்கத்தினரின் செயல்பாடுகள் பற்றி என்.ஐ.ஏ. அமைப்பு தீவிர விசாரணை நடத்திவருகிறது.
ஐஎஸ் தலைவர் மரணம் அடைந்தாலும், அந்த இயக்கத்தின் மற்றவர்கள் தொடர்பாக அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டே இருக்கிறது.
�,”