மஹா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி சத்குருவுக்கு வாழ்த்து!

public

மனித குலத்துக்கு ஆசி வழங்க ஆதியோகியிடம் பிரார்த்தனை!

“நம் மனம், உடல் மற்றும் புத்தியை ஒருங்கிணைக்க ஆதியோகி நமக்கு வழிகாட்டுகிறார்” என பிரதமர் மோடி, சத்குருவுக்கு அனுப்பிய மஹா சிவராத்திரி வாழ்த்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஈஷா நிறுவனர் சத்குருவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
புனிதமான மஹா சிவராத்திரி கொண்டாட்டத்துக்கு தாங்கள் செய்துவரும் ஏற்பாடுகளை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மஹா சிவராத்திரி விழா அனைவருக்கும் ஓர் உத்வேகத்தை அளிக்கும் ஆதாரமாக உள்ளது. ஆதியோகி எங்கும் நிறைந்து இருக்கிறார் என்பதை நினைவுகூர்வதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும். நம்முடைய மனம், உடல் மற்றும் புத்தி ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஜீவனில் இருந்து சிவனாக மாறுவதற்கு ஆதியோகி நமக்கு வழிகாட்டுகிறார்.
மக்களின் ஆன்மிக வளர்ச்சிக்காகவும், அவர்களின் வாழ்க்கை மேம்படுவதற்கும் நீங்கள் எடுத்துவரும் அயராத முயற்சிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கிராமப்புற மேம்பாட்டுக்கான திட்டங்கள், கல்வி, மருத்துவம் மற்றும் சமூக மறுமலர்ச்சி எனப் பன்முக திட்டங்களை நீங்கள் முன்னெடுத்து செய்து வருகிறீர்கள். உங்களுடைய இந்த முயற்சிகள் அனைத்தும் எண்ணற்ற மக்களின் வாழ்வில் நேர்மறை மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
இந்த மஹா சிவராத்திரி விழா, மனிதகுலம் தனது அறியாமையில் இருந்தும், இருளில் இருந்தும் கடந்து வருவதற்கான பாதையை நமக்குக் காட்டட்டும். மனித குலத்தின் மீது தனது ஆசிகளைப் பொழியுமாறு ஆதியோகியை நான் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆதியோகியில் நடக்கும் மஹா சிவராத்திரி கொண்டாட்டத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு எங்களது நன்றிகள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

**ஈஷா மஹா சிவராத்திரி விழா மார்ச் 1ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இவ்விழா இணையதளம் வழியாக 170 நாடுகளில் இருந்து சுமார் 10 கோடிக்கும் அதிகமான மக்களின் பார்வையைக் கவர்கிறது.**

விளம்பரம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.