பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மண் வளம் அவசியம் – சத்குரு

public

சத்குரு: 2020-ம் ஆண்டு க்ளாஸ்கோ பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் (COP26) கலந்துகொண்ட ஒரு நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சரோடு நான் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு வாரமாக அந்த மாநாட்டில் இருந்ததாகவும், மண் என்ற ஒரு வார்த்தையை யாரும் உச்சரிக்கவே இல்லை என்றும் அவர் தெரிவித்தார். பருவநிலை மாற்றத்தில் 40 சதவிகித பாதிப்புக்கு காரணமாக மண் இருக்கும்போது நாம் ஏன் மண்ணைப் பற்றிப் பேசுவதில்லை? ஏனென்றால், சூழலியல் தொடர்பான விஷயங்களைப் பற்றி பேசுபவர்கள் நகர்ப்புற மனிதர்கள், அவர்கள் நகரங்களின் பிரச்சினைகளான சுத்தமான காற்று, தூய்மையான குடிநீர் போன்ற நகர்ப்புற பிரச்சினைகளைப் பற்றி மட்டும்தான் பேசுகிறார்கள்.

நாம் இப்போது படிம எரிபொருட்களின் (Fossil Fuels) மீது தீவிரமான கவனம் செலுத்தி வருகிறோம். ஆம்… இது பிரச்சினையின் முக்கியமான அங்கம்தான். ஆனால், உலகின் எல்லா அரசாங்கங்களும் படிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளவும், மாற்று வழிகளைக் கண்டறியவும் ஏற்கனவே உறுதி எடுத்து பெரிய அளவில் செயல்பட்டு வருகிறார்கள். அதற்கான காலக் கெடுவை நிர்ணயித்து அதைப் பூர்த்திசெய்வதில் உறுதியாக உள்ளார்கள். வேகம் மட்டும்தான் ஒரு கேள்வியாக உள்ளது. மண் தான் இப்போதைய உண்மையான பிரச்சினை. இப்போது இதைத் தடுக்க நாம் எதுவும் செய்யாவிட்டால் அது கைமீறிப் போய்விடும் அளவுக்கு மண் சீர்கேடு அடைதல் மிக வேகமாக நிகழ்ந்து வருகிறது.


இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவது மிகவும் எளிது. ஏனென்றால் நம்மிடம் தீர்வு இருக்கிறது. நாம் தீர்வுள்ள பிரச்சினையை முதலில் கையாள்வோமா அல்லது இன்னும் தொழில்நுட்ப ரீதியிலான தீர்வுகள் எட்டப்பட வேண்டிய விஷயத்தைக் கையாள்வோமா? எரிபொருட்களை எரிக்காமல் சக்தியை உருவாக்கும் தொழில்நுட்பத் தீர்வு இன்னும் நம்மிடம் இல்லை. மக்கள் சூரிய சக்தி, காற்றாலை போன்றவை உள்ளதே என்று கூறுவார்கள். ஆனால் அவற்றால் நம் தேவையில் 2 சதவிகிதத்தைக்கூட உற்பத்தி செய்ய இயலவில்லை. நாம் அந்தத் திசையில் பயணிக்க வேண்டியது அவசியம்தான். ஆனால் அதற்கான தீர்வு வெகு தொலைவில் உள்ளது.

மண் சீர்கேட்டினைப் பற்றி குறிப்பிடாமல் பருவநிலை மாற்றங்கள் மற்றும் புவி வெப்பமயமாதல் பற்றி நீங்கள் பேசவே முடியாது. ஆரோக்கியமான மண் என்பது கார்பனைப் பிடித்துவைக்க கூடியதில் உலகிலேயே மிகச்சிறந்த ஒன்று. சதுர அடி அடிப்படையில் பார்க்கும்போது இது கடலை விடச் சிறந்தது. மண் மூடப்பட்டு மட்கும் பொருட்களை (கரிமச்சத்தினை) கொண்டிருந்தால், அது வளிமண்டலத்திலிருந்து கார்பனை உறிஞ்சிக் கொள்கிறது. அதே நேரத்தில், ஆரோக்கியமற்ற மண், உழவு செய்யப்பட்டு திறந்த நிலையில் இருக்கும்போது, கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் கார்பன்-டை-ஆக்சைடை விட 80 சதவிகிதம் அதிகமாக வளிமண்டலத்தைச் சூடேற்றும் மீத்தேனை வெளிவிடும் மூலமாகிறது.

ஏறக்குறைய 5.1 கோடி சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் அதாவது இந்த பூமியில் 70 சதவிகிதம் நிலப்பரப்பில் தற்போது விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலத்தை மனிதர்கள் தினமும் பராமரித்து வருகிறார்கள். எனவே இந்த நிலத்தைத்தான் நாம் முதலில் சரிசெய்ய வேண்டும். அதற்குத் தேவையான செயல்களை நாம் செய்தால் அது சாத்தியமும்கூட. மிருகங்களின் கழிவுகள், தாவரங்கள், புதர்கள், மரங்கள் என எந்தெந்த வழிகளில் முடியுமோ அதன் மூலம் கரிமச்சத்தை பூமியில் மீண்டும் இட வேண்டும். இந்த பூமியின் அனைத்து விவசாய நிலங்களிலும் குறைந்த பட்சம் 3-6 சதவிகிதம் கரிமச் சத்து இருக்க வேண்டும். இதை ஒவ்வொரு நாட்டின் கொள்கையிலும் இடம்பெறச் செய்தால் 12-15 வருட காலத்தில், மண்ணைக் காப்பதின் மூலம் தட்பவெப்ப மாறுதல்களைக் கணிசமாகத் தணிக்க முடியும்.

இதற்காகத்தான் மண் காப்போம் இயக்கத்தை நாம் முன்னெடுத்துள்ளோம். மண்ணின் தரத்தை பாதுகாப்பதினால் மட்டுமே இந்த பூமியின் தரமும், வாழ்க்கையின் தரமும் நிலைத்து நிற்கும். நாம் இதை நிகழச் செய்வோம்.

விளம்பர பகுதி

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *