சிறப்புக் கட்டுரை: இயற்கை விவசாயம் செய்தேன், நோயை விரட்டினேன்!

public

எலக்ட்ரீசியனாக இருந்தவர் இயற்கை விவசாயியாக மாறிய கதை!!

எலக்ட்ரீசியன் தொழில் செய்துவந்த பொன்முத்து, கடந்த 5 வருடங்களாக விவசாயம் செய்து வருகிறார். தொடக்கத்தில் இரசாயன உரங்கள் கொண்டு விவசாயம் செய்து வந்த இவர்,ஈஷாவின் முன்முயற்சியில் நடைபெற்ற பயிற்சியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி பாலேக்கரிடம் இயற்கை விவசாய பயிற்சி பெற்ற பிறகு, முற்றிலும் அதற்கே மாறிவிட்டார்.

இயற்கை விவசாயத்திற்கு மாறியது குறித்து சில விஷயங்களை உணர்வுப்பூர்வமாக நம்முடன் பகிர்ந்துகொண்டார். 

“வேதி விவசாயம் செய்யும்போது செடிகளுக்கு பூச்சி மருந்து அடிப்பது வழக்கம், அப்போது பூச்சிமருந்து அடித்தபின் குளித்துவிட்டு குழந்தைகளுக்கு உணவூட்டினாலும் கூட, ‘பூச்சி மருந்து அடித்து விட்டு வந்தோமே! அதனால் குழந்தைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ?’ என்ற அச்சம் ஏற்படும். ‘இதற்கு ஒரு விடிவு கிடைக்காதா?’ என்று யோசித்தபோதுதான் வரப்பிரசாதமாக ஈஷா ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயப் பயிற்சி அமைந்தது;

இரண்டரை ஏக்கரில் தென்னை பயிர் செய்து வருகிறார் பொன்முத்து; பூர்வீக சொத்தாக விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாதபடி இருந்த 3 ஏக்கர் நிலத்தில், ஒன்றரை ஏக்கர் நிலத்தை மட்டும் தற்போது திருத்தி சீர்செய்து காய்கறிகள் பயிர்செய்து கொண்டிருக்கிறார். 

பயிர்செய்வதற்கு முன்பு அடியுரமாக எதையும் போடவில்லை, ஜீவாமிர்தம் மட்டும் மாதத்திற்கு மூன்று முறை விடுவதாகக் கூறுகிறார். 

ஜீவாமிர்தம் தயாரிக்க பயறு மாவு வாங்கும் செலவைக் குறைக்க, பழைய பூச்சியடித்த பயறுகளை வாங்கி அரைத்துக் கொள்வதாக கூறுகிறார்.  சர்க்கரைச் செலவை குறைக்க பழக்கடைகளில் கனிந்து அழுகிப்போன மாம்பழங்களை வாங்கி அதன் சாற்றை இரண்டு மூன்று மாதத்திற்கு பயன்படுத்தியதாக கூறுகிறார்.

தனது நிலத்தில் சின்ன வெங்காயம் பயிர் செய்து அறுவடை செய்துள்ள இவர், ஊடுபயிராக முள்ளங்கி, பீட்ரூட், செடி அவரை, மிளகாய் போன்றவற்றை பயிர் செய்துள்ளார். 

காய்கறிகளில் தொடர்ந்து வருமானம் பெறுவதற்காக ஊடுபயிர் மற்றும் தொடர் சாகுபடிமுறையை பின்பற்றுகிறார் சின்ன வெங்காயம் நட்ட 40வது நாளில் தக்காளி, மிளகாய், கத்தரி போன்றவைகளை நட்டு விடுகிறார். 

அடுத்த வயலில் முள்ளங்கியுடன் தக்காளி சேர்த்து பயிர் செய்கிறார் இதில் முள்ளங்கி அறுவடைக்கு வரும் போது தக்காளி காய்க்கத் துவங்கும்! மற்றொரு வயலில் தக்காளிக்கு பதில் வெண்டையையும் போட்டிருக்கிறார்.

இத்தகைய தொடர் சாகுபடி முறையால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவாக உள்ளது என்றும், வேலையாட்களுக்கு தொடர்ந்து வேலை தர முடிவதோடு வருமானமும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்றும் கூறுகிறார்.

கொடிக் காய்கறிகளை இவர் பயிர் செய்வதில்லை, எனவே அமராவதிகவுண்டன் புதூரில் உள்ள இயற்கை விவசாயி கார்த்திகேயனிடமிருந்து பாகல், புடல், பீர்க்கன் போன்றவற்றை பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக முள்ளங்கி, பீட்ரூட், கத்தரி போன்றவற்றை அவருக்கு கொடுத்து காய்கறிகளை பரிமாறிக் கொள்கிறார், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எல்லாவிதமான காய்கறிகளையும் பெறுகிறார்கள். மீதம் உள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தையும் திருத்தி ‘5 அடுக்கு மாதிரி’ பயிர் செய்ய இருப்பதாகக் ஆர்வமாகக் கூறுகிறார் பொன்முத்து.

வேதி விவசாயத்தில் விளைந்த காய்கறிகளை உண்டபோது போது தனது குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவுகள் ஏற்படும் என்றும், தற்போது இயற்கை விவசாய காய்கறிகளை உண்பதால் கடந்த 9 மாதங்களாக மருத்துவ செலவுகளே இல்லை என்றும் கூறும் பொன்முத்து, “இயற்கையான காய்கறிகளை குழந்தைகள் உண்பதில் மகிழ்ச்சியும், மக்களுக்கு இயற்கை காய்கறிகளை கொடுப்பதில் திருப்தியும் உள்ளது” என்ற அவரின் குரலிலுள்ள மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

பல்லக்கு ஏறோணும்னா அதுக்கு உன்னி ஏற சீவன் வேணுமுங்க! அதுமாறி விவசாயம் செய்யோணும்னா வியாபாரம் செய்யுற தொழில்நுட்பத்தையும் தெரிஞ்சு வச்சிருக்கோணுமுங்க. நம்ம பொன்முத்து அதுல வெகரமாத்தே இருக்காங்க. நம்ம பொன்முத்து அண்ணா மாறி மனசுல இயற்கை விவசாயம் செய்யோணும்னு ஆசை இருந்துச்சாக்கும் ஈஷா விவசாய குழுவ தொடர்புகொள்ளுங்க.

**கட்டுரைத் தொகுப்பு – உஷா பாரதி**

**ஈஷா விவசாய இயக்கம்**

இயற்கை விவசாயத்தின் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தைப் பெருக்குவதோடு, நஞ்சில்லாத உணவு உற்பத்தியின் மூலம் மக்களின் ஆரோக்கிய வாழ்வை உறுதிப்படுத்தி தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றுவதற்காக ஈஷா விவசாய இயக்கம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

**ஈஷா விவசாய இயக்கம் குறித்த கூடுதல் தகவல்கள் பெற 83000 93777 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *