சிறப்புக் கட்டுரை: பாறை நிலத்தைப் பசுமையாக மாற்றிய தேவியின் கதை!

Published On:

| By Balaji

“உப்பு உரம்போட்டு 50,000 நஷ்டப்பட்ட இடத்துல இன்னிக்கு ரெண்டு குடும்பத்துக்குப் படி அளக்கற அளவுக்கு உயர்ந்திருக்கேன். ஜீரோ பட்ஜெட் பயிற்சிக்குப் போனேன். இன்னிக்கு நான் எங்க கிராமத்துக்கே ஹீரோ” எனக்கூறும் தாராபுரத்து விவசாயி தேவி.

**

தனக்குச் சொந்தமான பாறை நிலத்தைப் பசுமையாக மாற்றிய கதையை நம்முடன் அவரே பகிர்ந்துகொள்கிறார்.

**

படிச்சது ஆசிரியர் படிப்புங்க. வீட்டுக்காரரு பேருந்து ஓட்டுநர். ஒரே பையன்தான். அரசுப்பள்ளில வேலை கிடைக்கலை. அடிமாட்டு சம்பளத்துக்குத் தனியார் பள்ளியில உழைக்கப் பிடிக்கலை. குழந்தைலேர்ந்து பார்த்து வளர்ந்த தொழில கையில வச்சிட்டு எதுக்கு மத்தவங்களுக்கு கைகட்டி வேலை பார்க்கணும்னு தோணுச்சு. எங்க நிலத்துலயே பாடுபடறதுன்னு முடிவுபண்ணி மண்ணுல இறங்கிட்டேன்.

எங்க ஊருபக்கம் எல்லாம் செம்மண், சரளை மண் நிலந்தாங்க. கிணறு, ஆழ்துளை கிணறு எடுத்துதான் விவசாயம் பார்க்கணும். வெங்காயம், பருத்திதான் பயிர் வைப்பாங்க. முதல்ல வெங்காயம் போட்டபோது உப்பு உரம்தான் போட்டேங்க. என்ன மருந்து அடிக்கணும்னு சீட்டுல எழுதி கொடுக்கறத கடைல கொடுத்து வாங்கிட்டு வந்து அடிக்கணும். ஒருமுறை அடிச்சா, அதைத்தான் திரும்ப, திரும்ப அடிக்க வேண்டி வரும். ஒரு ஏக்கருக்கு 70,000 வரைக்கும் உரம், பூச்சி மருந்து அடிக்கணும். பல நேரம் என்ன செய்யறதுன்னு தெரியாம மலங்க, மலங்க முழிச்சிட்டு நிக்கணும். அதிகாரி, மருந்து சீட்டு கொடுக்கறவருன்னு யாராவது ஒருத்தரு கையை எதிர்பார்த்துதான் விவசாயம் செய்யற நிலைமை இருந்ததுச்சு.

**ஊரார் குழந்தையையும் ஊட்டி வளர்க்க முடியும்**

சீ இதென்ன பொழப்பு பொழைக்கிறேன்; நான் பெத்த குழந்தையை என்னால வளர்க்க முடியாதான்னு தோணும். என்ன செய்யறதுன்னு கையை பிசைஞ்சுட்டு நின்னப்பதான், ஈஷா விவசாய இயக்கத்தோட பயிற்சிக்குப் போனேன். என் குழந்தையை மட்டுமில்லை, ஊரார் குழந்தையையும் ஊட்டி வளர்க்க முடியும். மண்ணை பொன்னாக்கலாம். விவசாயத்துல, நெல்லு, கொள்ளுன்னு எதுவும் இல்லை. எதுலயும் லாபம் பார்க்கலாம்னு உணர்ந்தேன்.

இயற்கையை நம்பிட்டா, அதுவே நம்ம பார்த்துக்குங்கறது புரிஞ்சுது. பயிற்சி முடிச்சு வந்ததும் சீமமாட்டை வித்துட்டு காங்கேயம் நாட்டுப் பசு வாங்கினேன். நம்ம மண்ணுக்கும் தண்ணிக்கும் ஏத்த பயிர்தான் போடணும். இதுதான் பயிற்சியில நான் கத்துகிட்ட முதல் பாடம். எனவே, வெங்காயத்தைத்தான் பயிர் செய்யணும்ன்னு முடிவு செஞ்சேன். ஊடுபயிரா தக்காளி பயிர் வச்சேன். ஆனால், விளைவிக்கற விதத்தில் இயற்கை முறையைக் கொண்டு வந்தேன். காய்களை சுத்தி கொஞ்சமா தட்டைப்பயறு வச்சேன். அதைத்தேடி வரும் நன்மைதரும் பூச்சிகள், காய்களை திங்கும் தீயபூச்சிகளை சாப்பிடறதால காய்கறிக்கு எந்த சேதமும் இல்லை. விதைநேர்த்தியாக்க பீஜாம்ருதம், வளர்ச்சி ஊக்கியாக ஜீவாம்ருதம் பாய்ச்ச ஆரம்பிச்சேன்.

இயற்கை உரம், ஜீவாம்ருத கரைசல், இயற்கை பூச்சிவிரட்டி தெளிப்பான், சொட்டுநீர் பாசனம், பூண்டு, மிளகாய், மாட்டு மூத்திரம், வேம்பழம் இதெல்லாம் போட்டு தயாரிச்ச அக்னி அஸ்திரங்கற ஒரு இயற்கை பூச்சி விரட்டி, இதுதான் என்னோட பாறை நிலம் பசுமை நிலமா மாறின மாஜிக் என்கிறார் தேவி.

பிரசவிக்கற ஒரு தாய் தன்னோட குழந்தை நல்லா பிறந்திருக்கற பார்த்து ஆனந்தமா இருக்கற மாதிரியான மனநிலைல இருக்கேங்க. எப்ப அந்த மாதிரி உணர்ந்தேனோ, அதுவே வாழ்க்கைன்னு முடிவு செஞ்சிட்டேன் என்கிறார்.

**உப்பு உரம் போட்டு பத்து டன் வெங்காயம் எடுத்தும் 50,000 நஷ்டபட்ட நான் இன்னிக்கு லாபம் பார்த்தது மட்டும் அல்லாமல் ரெண்டு குடும்பத்தை வாழவைக்கறது பெருமையா இருக்கு என்கிறார்.**

நேத்துவரைக்கும், இதுக்கு என்னதெரியும்னு என்னை பார்த்த என் மாமனார், இன்னிக்கு குடும்ப முடிவுகளில்கூட என்னைக் கலந்து பேசுற அளவுக்கு மாறியிருக்காருன்னா, அதுக்கு நொடிஞ்சு போச்சுன்னு இருந்த விவசாய நிலத்தை இயற்கைக்கு மாத்தி நிமிர்த்தினதுதான் காரணம் என நெஞ்சு நிமிர்த்தி சொல்கிறார். இப்படி நான் மாற ஈஷா விவசாய இயக்கம்தான் காரணம். ஈஷா பசுமைக்கரங்கள்தான் என்னை இயக்கிட்டு இருக்கு எனக்கூறும் அவர், இயற்கை விவசாயத்துல, குறிப்பா காய்கறி பயிர் வைக்கறதுல பெரிய சவாலே நல்ல தரமான விதை கிடைக்காததுதான். அதுக்கும் ஈஷா உதவி செய்யறதால எந்த பிரச்சனையும் இல்லாம சமாளிக்க முடியுது என்கிறார்.

அதேபோல், இந்த சத்தான, நல்ல உணவு யார் விரும்பறாங்களோ, அவங்க கைக்கு போகணும். அதுக்கான மரியாதை கிடைக்கணும் என்கிறார். புரியலையே என நாம் எதிர்கேள்வி எழுப்ப, இயற்கையா விளைஞ்ச இந்த பயிர்கள், காய்கறிகள் எல்லாம் பத்தோட பதினோண்ணா, இரசாயன உரங்கள் போட்டு விளைந்த பயிர்களுடன் விற்பனை செய்யாம, இதற்கான சந்தைப்படுத்துதல், தனி அங்காடிகள் என்பதாக விற்பனை செய்யப்படணும். அரசு இயற்கை விவசாயப் பொருட்களை விற்பனை செய்வதற்கு தனியா கடை கட்டி விடணும் எனக்கூறுகிறார் தேவி. அட விவசாயத்திற்குள்ளும் ஒரு நேர்த்தியான அரசியல் கோரிக்கையை வைக்கிறாரே என்று வியப்பில் நம் புருவங்களும் உயரவே செய்கின்றன.

**அரசியல் கோரிக்கைகளை அரசுக்கு வைக்கும் இவர், தனது சமூக பொறுப்பையும் மறுக்கவில்லை. தற்போது முருங்கை கீரை சாகுபடி செய்யும் அவர், கால்சியம் குறைவாக உள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இயற்கை முறையில் சத்தான கீரைகளை கொண்டு சேர்ப்பதை நோக்கமாக கொண்டே கீரை பயிர் வைத்திருப்பதாகக் கூறுகிறார்.**

**

நேத்துவரைக்கும் இவ பொம்பளைதானே என்ன சாதிச்சிடப்போறான்னு பார்த்த எங்க கிராம மக்கள், இன்னிக்கு விவசாயம் மற்றும் அதைத்தாண்டி பல்வேறு சிக்கல்களுக்கான தீர்வுக்கு என்னை ஆலோசனைக் கேட்கும்போது பெருமையா இருக்கு. ஊருக்குள்ள பெரிய பிரமுகரா இருப்பவங்க கூட தேவி எங்க நிலத்துல வச்சிருக்கற பயிரைப் பார்த்து ஆலோசனை சொல்லேன்னு சொல்லும்போது பெருமிதமாக உணர்கிறேன் என்கிறார்.

**

எங்க கிராமம் முழுசையும் இயற்கை விவசாய கிராமமா மாத்தணும். நஞ்சில்லா உணவை நிறையபேருக்கு கொண்டு சேர்க்கணும் என்று கூறும் இவர், சமீபத்தில் தனது மருமகளின் பிறந்தநாளுக்கு 200 மரக்கன்றுகளை அவருக்கு பரிசாக அளித்துள்ளார். அதனை வளர்த்து, பராமரிக்க வேண்டும் என்று அவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ள அவர், மண்ணுல கால்பதிச்சிட்டாங்கன்னா, மண்ணை நேசிக்க ஆரம்பிச்சிடுவாங்க. அப்புறம் அந்த மண்ணே அவங்களுக்கு எல்லாத்தையும் கத்துகொடுத்திடும் என்கிறார்.

விவசாயத்தை கண்டுபிடித்தது பெண்கள் என்பது வரலாறு. தேவியைப் போன்ற பெண்களைப் பார்க்கும்போது, இயற்கை விவசாயத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது, நஞ்சில்லா உணவை நாளைய தலைமுறைக்கு சாத்தியமாக்குவது போன்ற அனைத்தையும் பெண்கள் செய்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கை விதை நமக்குள்ளும் விழுகிறது. அந்த விதை விருட்சமாகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதற்கு தேவிக்களே நமக்கு சாட்சியங்கள்.

இயற்கை விவசாயத்துடன் இவர் இணைந்த கதையை அவர் மொழியில் கேட்க….

**கட்டுரைத் தொகுப்பு: உஷா பாரதி**

**ஈஷா விவசாய இயக்கம்**

இயற்கை விவசாயத்தின் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை பெருக்குவதோடு, நஞ்சில்லாத உணவு உற்பத்தியின் மூலம் மக்களின் ஆரோக்கிய வாழ்வை உறுதிபடுத்தி தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றுவதற்காக ஈஷா விவசாய இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ஈஷா விவசாய இயக்கம் குறித்த கூடுதல் தகவல்கள் பெற 83000 93777 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

[சிறப்புக் கட்டுரை: கழிவுன்னு எதுவுமே இல்லை!](https://minnambalam.com/public/2020/09/30/6/isha-agro-movement-durai-raj-storu)

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share