�பள்ளிகள் திறப்பு: தனியார் பள்ளிகளின் முயற்சியை முறியடித்த மருத்துவ நிபுணர்கள்!

public

பாடத்தில் ஏற்படும் குழப்பங்களை விட தற்போதைக்கு பள்ளித் திறப்பு எப்போது என்று முன்னுக்குப் பின் முரணாக வெளிவரும் அரசின் அறிவிப்புகளால்தான் அதிக குழப்பம் அடைந்துள்ளார்கள் மாணவர்கள். இந்த விஷயத்தில் மாணவர்களோடு சேர்ந்து பெற்றோர்களும் குழப்பத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. படிப்படியாக ஊரடங்கு ஒவ்வொரு கட்டமாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், இப்போது வரை பள்ளிகள் திறப்பு இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

ஜூன் மாதம் முதல் இந்த கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் பல தனியார் பள்ளிகள் ஆன் லைன் வழி கல்வியை அறிமுகப்படுத்தின. அதன் பின் அரசுப் பள்ளிகளும் ஆன் லைன் வழி கல்வியை கையிலெடுத்தன. ஆனால் ஆன் லைன் வழி கல்விக்கு தேவையான கணினி, ஸ்மார்ட் போன் உள்ளிட்டவை இல்லாத மாணவர்கள் ஆன் லைன் வழி கல்வியால் பலன் பெற முடியவில்லை என்ற பரிதாபமும் ஒரு பக்கம் நிலவுகிறது. சில மாணவர்கள் இதனால் தற்கொலை செய்துகொண்ட பரிதாபங்களும் தமிழகத்தில் நடந்தன.

இன்னொரு பக்கம் கடந்த சில மாதங்களாகவே தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறப்பு பற்றி வெளியிட்டு வரும் கருத்துகளும் ஒன்றோடொன்று முரண்பட்டே இருக்கின்றன. இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு கிடையாது, முதலமைச்சர் முடிவு செய்வார் என்பது போன்ற அமைச்சரின் பேட்டிகளைப் பார்த்து பெற்றோர்களும் ஆற்றாமை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில்தான் கடந்த ஆகஸ்டு 11 ஆம் மத்திய கல்வி துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

அப்போது பேசிய மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் அமித் காரே, “கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வராத நிலையில பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டால் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே, கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகளை திறப்பதற்கான வாய்ப்பு குறைவு என மதிப்பிடப்பட்டுள்ளது. இருந்தாலும் ஜீரோ அகாடெமிக் வருடம் என அறிவிக்கப்படாது” என்று நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களிடம் விளக்கியுள்ளார். ஆன்லைன், சமூக ரேடியோ மூலமாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பள்ளி வகுப்புகளைத் தொடர முடிவு செய்யப்பட்ட தகவலையும் தெரிவித்தார்.

இதன் பின், தனியார் பள்ளிகள் நாடு தழுவிய நிலையில் தங்கள் லாபியை முடுக்கிவிட்டன. ஏனெனில் தனியார் பள்ளிகள் இந்த கல்வியாண்டுக்கான கட்டணத்தை பழைய அளவில் வசூலிக்கத் திட்டமிட்டன. அதற்கான ஏற்பாடுகளில் இறங்கின. ஆனால் பெற்றோர்கள் புகார், அரசியல் கட்சிகளின் நெருக்கடி காரணமாக தமிழக அரசு ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் வசூலிக்க கூடாது என ஏப்ரல் மாதம் அரசாணை பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்புகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தில் இருந்து தனியார் பள்ளிகள் 40% கட்டணத்தை ஆகஸ்ட் 31க்குள் வசூலிக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் பல தனியார் பள்ளிகள் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி தங்கள் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலித்து வருவதாக புகார்கள் பெற்றோர்கள் தரப்பில் இருந்து புழுக்கமாக எழுகின்றன. ஆனால் தங்களின் பிள்ளைகளின் படிப்பு விஷயம் என்பதால் அவர்களால் இதுகுறித்து வெளிப்படையாக புகார் தெரிவிக்க முடியவில்லை. ஆன் லைன் மூலமாகத்தானே வகுப்புகள் எடுக்கிறீர்கள்? பின் எதற்கு வழக்கமான பள்ளிக் கட்டணங்கள் கேட்கிறீர்கள் என்று பெற்றோர்கள் தரப்பில் கேட்டாலும் அதற்கு பள்ளி நிர்வாகங்கள் பதில் சொல்லவில்லை.

இவ்வாறு பெற்றோர்களின் நெருக்கடி அதிகமாவதால் பள்ளிகளைத் திறப்பது ஒன்றே தாங்கள் கட்டணம் வசூலிப்பதற்கு ஏற்ற வழி என்பதை உணர்ந்த தனியார் பள்ளிகள் சங்கத்தினர், பள்ளிகள் திறப்பதை உறுதி செய்வதற்காக அரசை பல வழிகளிலும் நாடியிருக்கிறார்கள். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயரதிகாரிகளிடம் இதுகுறித்து தனியார் பள்ளிகள் பேசியிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான்… தமிழ்நாட்டில் அக்டோபர் 1 முதல், அரசு பொதுத் தேர்வு எழுதும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறியலாம் என்று செப்டம்பர் 24 ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த அரசாணையால் தனியார் பள்ளி நிர்வாகங்கள் உற்சாகம் அடைந்தன. பெற்றோர்களின் சுய விருப்பத்தின் பேரில் என்று அரசாணையில் கூறினாலும், பல தனியார் பள்ளிகள் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரையும் பள்ளிக்கு வர வைக்கும் நடவடிக்கைகளில் இறங்கின. பெற்றோர்களும் மாதக் கணக்கில் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கட்டணம் மட்டுமே கட்டுவதற்கு பதிலாக, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பலாம் என்ற மனநிலைக்குத் தயாராகிவிட்டனர். இந்த வகுப்புகளைத் தொடர்ந்து மற்ற வகுப்பு மாணவர்களையும் இதேபோல பள்ளிகளுக்கு வர வைக்கும் அடுத்த கட்ட முயற்சிகளிலும் தனியார் பள்ளிகள் தீவிரமாக இறங்கின.

தனியார் பள்ளிகளின் லாபிக்கு, ‘இணங்கி’யதாலேயே அரசு இந்த அரசாணையை வெளியிட்டிருக்கிறது என்று கல்வித் துறைக்குள் சிலர் புகார் கூறுகிறார்கள்.

இதுகுறித்து தனியார் பள்ளிகள் தரப்பில் கேட்டபோது, “ ஆன்லைன் கல்வியால் மாணவர்கள் ஹெட்போன், தினமும் சில மணிநேரம் கணினி அல்லது செல்போன் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். இதனால் அவர்களின் காது, கண் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். அடுத்த ஆண்டே அவர்கள் கண்ணாடி போடும் நிலை உருவாகலாம். காதுப் பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம். இதைத் தவிர்க்க அவர்கள் பள்ளிக்கு வருவது பெட்டர்.

இதைத்தான் நாங்கள் அரசிடம் எடுத்துச் சொன்னோம். வேறு எதுவும் எங்களுக்கு சாதகமான ஏற்பாடுகளுக்காக நாங்கள் பேசவில்லை” என்கிறார்கள். ஆனால் அரசு வெளியிட்ட இந்த அரசாணையை ஐந்தே நாட்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரத்து செய்துவிட்டார். செப்டம்பர் 28 ஆம் தேதி கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்கள் ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில்,

“ 29-8-2020 மற்றும் 8-9-2020 ஆகிய தேதிகளில் மத்திய அரசால் வெளியிடப்பட்ட ஆணைகளின்படி, தமிழ்நாட்டில் 1-10-2020 முதல், அரசு பொதுத்தேர்வு எழுதும் 10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய மட்டும் அனுமதித்து 24-9-2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு ஐயப்பாடுகளை கேட்டறிய மட்டும் வழங்கிய அனுமதி குறித்து கவனமுடன் செயல்படலாம் என்ற மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின்படியும், மருத்துவ நிபுணர்கள் அளித்த கருத்துகளின் அடிப்படையிலும், தற்போதுள்ள கொரோனா நோய்ப்பரவலின் தன்மையை கருத்தில் கொண்டும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய அனுமதிக்கும் அரசாணை தற்சமயம் நிறுத்திவைக்கப்படுகின்றது. இது குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு உரிய நேரத்தில் அனுமதி வழங்குவது பற்றி முடிவெடுக்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

இது தனியார் பள்ளிகளுக்கு அதிர்ச்சி தரும் அறிவிப்பாக வந்திருக்கிறது. காரணம் மாணவர்களை பள்ளிக்கு வர வைத்துவிட்டால் கல்விக் கட்டணத்தை வழக்கம்போல வசூலிக்கலாம் என்ற தனியார் பள்ளிகளின் எண்ணம் இதனால் தற்போதைக்கு தடுக்கப்பட்டிருக்கிறது.

தான் வெளியிட்ட அரசாணையை ஐந்தே நாட்களில் தமிழக அரசு நிறுத்தி வைத்ததற்கு மருத்துவ நிபுணர்களின் கடும் எச்சரிக்கைதான் காரணம் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

“29 ஆம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிகளுக்கு மாணவர்கள் சுய விருப்பத்துடன் போகலாம் என்ற முடிவை கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு குடும்பத்தின் பிரதிநிதிகளாக பள்ளிக்கு வருகிறார்கள். அவர்களின் வீட்டில் 50 வயதுக்கு மேற்பட்ட பெற்றோர்கள் 70 வயதுக்கு மேற்பட்ட தாத்தா பாட்டிகள் இருப்பார்கள். பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் வழியிலும், பள்ளியிலும் தொற்று பரவ ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. பிள்ளைகளை ஓரளவுக்குத்தான் ஆசிரியர்களால் கட்டுப்படுத்த முடியும்.

எனவே இப்போதைக்கு பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்புவது பெரும் தொற்றுப் பரவலுக்கு வித்தாக இருக்கும் ஆபத்து இருக்கிறது. எனவே இந்த அரசாணை ஆபத்தானது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இதையடுத்தே பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லும் அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் ‘தற்காலிகமாகவே’ நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று அறிவித்திருக்கிறார்கள். எனவே இந்த அரசாணையை செயல்படுத்துவதற்கான அடுத்த கட்ட முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள் தனியார் பள்ளிகள் தரப்பில்” என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

கல்விக் கட்டணத்தை முழுமையாக வசூலிப்பதற்கு இந்த அரசாணையை ஒரு வாசலாக பயன்படுத்த நினைக்கின்றன தனியார் பள்ளிகள். ஆனால் மாணவர்கள் மூலம் தொற்றுப் பரவல் ஏற்படும் என்ற மருத்துவர்களின் எச்சரிக்கையே இதை தடுத்து நிறுத்தியிருக்கிறது.

**-வேந்தன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *