கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் ஜாமீனுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 15) தள்ளுபடி செய்துள்ளது.
கர்நாடக காங்கிரஸின் முக்கிய தலைவரும், அம்மாநில முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமார், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகளால் செப்டம்பர் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஒரு மாதத்துக்கும் மேல் சிறையிலிருந்த அவருக்கு அக்டோபர் 23ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சிறையிலிருந்து வெளியே வந்த அவர், தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு எதிராக அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது, சிவக்குமாரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.
இந்த மனு இன்று (நவம்பர் 15) நீதிபதிகள் நாரிமன் மற்றும் ரவீந்திர பட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிரான மனுவிலிருந்து எதுவும் மாற்றப்படாமல், அதில் உள்ளவற்றை அமலாக்கத் துறை அப்படியே கட்-காப்பி-பேஸ்ட் செய்து இவ்வழக்கில் மனுத் தாக்கல் செய்துள்ளதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்த நீதிபதி நாரிமன், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளுடன் விளையாடாதீர்கள் என்று எச்சரித்துள்ளார்.
மேலும், சபரிமலை வழக்கில் தீர்ப்பைப் படியுங்கள், தீர்ப்பின் நிலைப்பாட்டை உங்கள் அரசுக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
�,