நடைப்பயிற்சி: ஆர்வலர்களின் குழப்பமும் வல்லுநர்கள் விளக்கமும்

public

அ.குமரேசன்

கொரோனா முதல் அலை ஏற்படுத்திய காயங்களிலிருந்து வடிந்த குருதியின் ஈரம் உலர்வதற்குள்ளாக இரண்டாம் அலை குதறிக்கொண்டிருக்கிறது. மூன்றாவது அலை கூரிய பற்களோடு வர இருப்பதையும், சில நாடுகளில் நான்காம் அலை தன் நகங்களைக் கூர் தீட்டிக்கொண்டிருப்பதையும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பொதுமுடக்கம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளின் தேவை உணரப்படுகிறது. விளையாட்டாகவோ வீம்பாகவோ பொதுமுடக்க விதிகளை மீறக்கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது. வழிபாடு, கொண்டாட்டம் என எந்த வகையிலும் மீறுகிறவர்கள் தங்களுக்கும் சம்பந்தமே இல்லாத மற்றவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆகவேதான் அணுகுமுறைகளில் மாற்றுக் கருத்துகள் உள்ளவர்களும் முகக்கவசம், சமூக இடைவெளி, கூட்டம் கூடாதிருத்தல் உள்ளிட்ட அந்த விதிகளைக் கடைப்பிடிக்கிறார்கள்.

பொதுமுடக்கத்திற்கான விளக்கங்கள் போதுமான அளவுக்குத் தரப்பட்டிருக்கின்றன என்றாலும், பலருக்கு வேறொரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. காலையிலோ, மாலையிலோ உடற்பயிற்சியாகக் கால்வீசி நடக்கிற பழக்கம் உள்ளவர்கள் அவர்கள். பொதுமுடக்கம் என்றில்லாவிட்டாலும், கொரோனாவின் கோரத் தாண்டவத்தைப் பார்க்கிறபோது அப்படி நடைப்பயிற்சி மேற்கொள்வதால் தங்களுக்கோ, தங்களால் மற்றவர்களுக்கோ பாதிப்பு ஏற்படுமோ என்ற ஐயம் அவர்களை முடிவெடுக்க முடியாமல் முடக்கிப்போடுகிறது. கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது என்று அறிவியலாளர்கள் சொல்வதைக் கேட்டு, அப்படியானால் வெளியே செல்கிறபோது காற்றில் பரவியிருக்கக்கூடிய வைரஸ் தங்களைத் தொற்றிவிடக்கூடும், தங்களை நேரடியாகப் பாதிக்கிறதோ இல்லையோ, பின்னர் தங்களிடமிருந்து குடும்பத்தினரையோ அண்டை வீட்டுக்காரர்களையோ அலுவலகத்தில் உடன் பணியாற்றுகிறவர்களையோ தொற்றக்கூடும் என்று தன்னலமும் பிறநலமும் கலந்து தயங்குகிறார்கள். வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று காற்று வாங்குவதைக் கூடத் தவிர்க்கிறார்கள்.

வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது என்றால், அது ஏதோ தூசுப் படலம் போலக் காற்றில் பரவித் திரிந்துகொண்டிருக்கும், வெளியே வருகிறவர்கள் மீது விழுந்து சுவாசத்தின் மூலம் நுரையீரலுக்குள் நுழைந்துவிடும் என்று புரிந்துகொள்ளக்கூடாது என்று அறிவியலாளர்கள் விளக்கியிருக்கிறார்கள். வைரஸ் தானாகப் பறந்து பரவக்கூடியதல்ல. அதற்கான இறக்கைகளோ கால்களோ அதற்குக் கிடையாது. சளித்துளிக்குள் பதுங்கி, அதனை ஒரு வாகனம் போல் பயன்படுத்தித்தான் பயணிக்கிறது. தொற்று ஏற்பட்டுள்ள ஒருவர் தும்முகிறபோது, இருமுகிறபோது, பேசுகிறபோது, பலமாகப் பெருமூச்சு விடுகிறபோது வெளியேறுகிற சளித்துளிகளைப் பற்றிக்கொண்டு வைரஸ் தானும் வெளியே வருகிறது. தொடக்கத்தில், பெரிய சளித்துளிகளில் மட்டுமே வைரஸ் இருக்கும் என்று கருதப்பட்டதால், அந்தப் பெரிய துளிகள் வெளியே பாய்ந்து கீழே விழக்கூடிய தொலைவு கிட்டத்தட்ட ஒன்றரை மீட்டர் வரைதான் என்பதால், அந்த அளவுக்கு இடைவெளி தேவை என்று பரிந்துரைக்கப்பட்டது.

அடுத்தடுத்த ஆராய்ச்சிகளில், சிறு சிறு துளிகள் மூலமாகவும் வைரஸ் வெளியேறுவது உறுதிப்படுத்தப்பட்டது. அந்தச் சிறு துளிகள் மேலும் ஓரிரு மீட்டர்கள் வரையில் கூடுதலாகப் பாய்ந்து கீழே விழுந்துவிடும். ஆகவே, அதற்கேற்ப சமூக இடைவெளியை அதிகப்படுத்திக்கொள்வது, கூட்டத்தைத் தவிர்ப்பது, கைகளைக் கழுவிக்கொள்வது, முகக்கவசங்களையும் அடிக்கடி தூய்மைப்படுத்திக்கொள்வது, ஒரே முகக்கவசத்தையே வைத்துக்கொண்டிராமல் அவ்வப்போது புதிய முகக்கவசங்களை வாங்கிப் பயன்படுத்துவது போன்ற ஆலோசனைகள் அறிவுறுத்தப்படுகின்றன. அவரவர் சூழலுக்கேற்ப மருத்துவம் சார்ந்த முகக்கவசம், இரட்டை முகக்கவசம் போன்றவற்றைப் பயன்படுத்தவும் ஆலோசனை கூறப்படுகிறது. “தலைவரே, எப்படி உங்க மாஸ்க் மட்டும் அழுக்குப்படாம புதுசாவே இருக்கு,” என்று கேட்கிறார் ஒரு விசுவாசி. “அதுவா, நான் தும்முறபோதும் இருமுறபோதும் மாஸ்கைக் கழட்டி வெச்சிடுவேன்,” என்கிறார் தலைவர். இந்த நகைச்சுவைத் துணுக்கு நினைவுக்கு வருகிறது.

சிரித்துவிட்டு இப்போது நாம் நடைப்பயிற்சி பற்றிய குழப்பத்திற்கு வருவோம். அன்றாட நடைப்பயிற்சியைத் தொடர்வதா, அதையும் நிறுத்திவைப்பதா? இந்த வினா பலரிடமிருந்தும் வந்ததைத் தொடர்ந்து சில மருத்துவ வல்லுநர்கள், நடையைத் தவிர்ப்பதே நல்லது என்று கருத்துக் கூறியிருக்கிறார்கள். ஆயினும், நீரிழிவு, கொழுப்பு போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் மருத்துவக் காரணங்களுக்காக நடைப்பயிற்சி மேற்கொண்டாக வேண்டியிருக்கிறது. அது பிரச்சினையை வரவேற்பதாகிவிடுகிறது. நடந்தேயாக வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்கள், உரிய முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றி சிறிது நேரம் நடைப்பயிற்சிக்குச் சென்று வரலாம் என்று அந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள். அப்படி நடப்பதைக் கூட, மக்கள் நடமாட்டம் இல்லாத அதிகாலைப் பொழுதில் மேற்கொள்வது நல்லது என்றும் அவர்கள் பரிந்துரைக்கிறார்கள் (‘இந்தியா டுடே’, இணையப் பதிப்பு, மே 5).

**பல சூழல்களோடு**

இது குறித்துக் கேட்டபோது தில்லி விஞ்ஞான் பிரசார் அமைப்பின் மூத்த அறிவியலாளரும், தமிழில் கொரோனா தொடர்பானவை உள்ளிட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதி வருபவருமான டி.வி. வெங்கடேஸ்வரன், “நடைப்பயிற்சி போகலாமா என்ற கேள்வியைப் வேறு பல சூழல்களோடு இணைத்துதான் பார்க்க வேண்டும். உதாரணமாக, ஒரு பெரிய மைதானத்தில், அருகில் வரக்கூடியவர்கள் யாரும் இல்லாத அல்லது யாருமே இல்லாத இடத்தில், தனியாக நடந்து செல்கிற வாய்ப்புள்ள சாலையில் அல்லது தெருவில், முகக்கவசம் அணிந்துகொண்டு நடப்பதில் பிரச்சினை இல்லை,” என்றார்.

“சில குடியிருப்புப் பகுதிகளில் நடைப்பயிற்சிக்கென்றே இடம் அமைத்திருப்பார்கள். அங்கேயெல்லாம் பார்த்தால் பலரும் நெருக்கமாக நடப்பார்கள். சேர்ந்து நடப்பார்கள். ஒருவர்க்கொருவர் மிகக்குறைவான இடைவெளிதான் இருக்கும். அப்படிப்பட்ட நெரிசலான இடங்களை இப்போதைக்குத் தவிர்ப்பதுதான் நல்லது. மொட்டை மாடியில் நாம் மட்டும் நடப்பதில் சிக்கலில்லை. திறந்த காற்றிலிருந்து வைரஸ் வந்துவிடாது. வெளியே நடக்கிறபோது எதிரே வருகிறவருடன் நின்று பேசுவோம், எப்படி இருக்கீங்க என்று நலம் விசாரிப்போம், வழியில் ஒரு டீக் கடையைப் பார்த்தால், ஏற்கெனவே அங்கே நிற்பவர்களோடு சேர்ந்து டீ குடித்துக்கொண்டே உரையாடுவோம்… இதெல்லாம்தான் சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது. ஆகவேதான், பிரச்சினையே வேண்டாமென்று பொதுவாக நடையைத் தவிர்த்துவிட்டு, வீட்டிலேயே இருக்கப் பரிந்துரைக்கிறார்கள்,” என்று அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.

**நடைப்பயிற்சி நண்பர்கள்**

முன்னணி ஹோமியோபதி மருத்துவரும், டாக்டர் கோபிகர் ஹோமியோபதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான பி.வி. வெங்கட்ராமன், இன்னொரு பழக்கத்தையும் சுட்டிக்காட்டினார். “ஒரு கலாச்சாரம் போல நடைப்பயிற்சி நண்பர்கள் என்றே சிறு சிறு குழுக்கள் இருக்கின்றன. அவர்களோடு சேர்ந்துதான் பேசிக்கொண்டே நடக்கிறோம், நடைப்பயிற்சி முடிகிறபோது உட்கார்ந்து அரட்டையடிக்கிறோம். பூங்காக்களில், குறுகலான தெருக்களில், நடைமேடைகளில் நடக்கிறபோது எதிரே வருகிற எல்லோரும் முகக்கவசம் அணிந்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. வழிபாடுகள் சார்ந்த கூட்டங்கள் கூடக்கூடிய இடங்களிலும் இதே நிலைமைதான். இப்படிப்பட்ட நெருக்கமான தொடர்பு வாய்ப்புகள் தொற்றுக்கு வழிசெய்துவிடக்கூடும் என்பதால்தான் நடைப்பயிற்சி வேண்டாம் என்று சொல்லப்படுகிறது. தனியாக நடக்கக்கூடிய, விசாலமாக இருக்கக்கூடிய இடங்களில் தைரியமாக நடக்கலாம். அப்போதும் முகக்கவசம் கண்டிப்பாகத் தேவை,” என்றார் அவர்.

“கோவிட் தாக்கம் உள்ளவர்களுக்கு இதயம், தசை போன்ற அங்கங்கள் பலவீனமாக இருக்கும். அவர்கள், தங்களுக்குத் தொற்று இருக்கிறதா இல்லையா என்றே உறுதிப்படாதபோது நடைப்பயிற்சி சென்றால் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும். ஆகவேதான், சிறு பாதிப்பு கூட தீவிரமாகலாம் என்ற அச்சமிருப்பதால், வழக்கமான உடற்பயிற்சி, பிரணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சி கூட இப்போது வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது,” என்றும் கூடுதலாகப் பகிர்ந்துகொண்டார்.

**உடற்பயிற்சி மட்டுமல்ல**

அக்கு சிகிச்சையாளரும், கம்பம் அக்குபங்சர் அகாடமி முதல்வருமான உமர் பாரூக் இதுபற்றிக் கூறுகையில், “வீட்டிலேயே முடங்குகிறபோது மூட்டுகள் அசைவுக்கான வாய்ப்பு சுருங்கிவிடுகிறது. ஆகவே பாதுகாப்பான நடைப்பயிற்சி அவசியமாகிறது. நடை என்பதை வெறும் உடற்பயிற்சியாக மட்டும் பார்ப்பதற்கில்லை. மனநலத்தோடும், சிந்தனை வளர்ச்சியோடும் சம்பந்தப்பட்டது நடை. உடலியலும் உளவியலும் இணைந்து செயல்பட்டால்தான் எந்தப் பணியும் முழுமையடையும். பிடித்தமான ஒன்றை யோசித்தபடி மன அழுத்தமில்லாமல், ரசனை ஈடுபாட்டோடு காலாறச் செல்வதுதான் நடை,” என்றார்.

“உலக சுகாதார நிறுவனம் சொல்கிற முகக்கவசம், கொரோனா கிருமியை விட நுட்பமான துளைகளைக் கொண்டது. நாம் பொதுவாகப் பயன்படுத்துவது எதிரே இருப்பவரிடமிருந்து வெளியேறக்கூடிய கிருமிகளைத் தடுக்கக்கூடியதுதான். கொரோனா கிருமி பற்றிய தகவல்கள் போதுமான அளவுக்கு இல்லாத நிலையில் பரிந்துரைக்கப்பட்ட சமூக இடைவெளி, இப்போது கொரோனா பற்றிய அறிவு அதிகரித்துள்ள நிலையில் அப்படியே பொருந்தாது. அமெரிக்காவில், தனியான திறந்தவெளிகளில் முகக்கவசம் தேவையில்லை என்றே சொல்கிறார்கள். எதிரே இருப்பவரோடு பேசும்போதும், மூடப்பட்ட இடங்களில் இருக்கிறபோதும்தான் முகக்கவசம் தேவை என்றெல்லாம் அங்கே பரிந்துரைக்கப்படுகிறது. நம் நாட்டில் உள்ள குழப்பமான சூழலில் சரியான ஆலோசனைகளை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கிறபோது முகக்கவசம் அணிந்துகொள்ளலாம். ஆனால் தொடர்ந்து அணிவது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே தனியாக அல்லது போதுமான இடைவெளியோடு நடக்கிற இடமா, நெருக்கமாக நடமாடுகிற இடமா, எப்படிப்பட்ட திறந்தவெளி என்பதைப் பொறுத்து முடிவெடுக்கலாம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

கிருமிகளை எதிர்கொள்ள நேரிடுகிறபோதுதான் உடலின் இயற்கையான நோயெதிர்ப்புத் திறன் நன்கு வலுப்பெறும்; வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு, வகைவகையான உணவுகளையும் மருந்துகளையும் எடுத்துக்கொள்வதால் மட்டும் அந்தப் பலன் கிடைத்துவிடாது என்று சுட்டிக்காட்டுகிறார்கள் பல கிருமியியல் ஆய்வாளர்கள். உரிய ஆலோசனைகளை முறையாகக் கடைப்பிடிக்கிற உறுதிப்பாடு இருக்குமானால் நடையைத் தவிர்க்க வேண்டியதில்லை என்றே அவர்களும் அறிவுறுத்துகிறார்கள். ஆம், நடப்பது என்பது நடப்பு நிலைமைகளுக்கேற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்வதற்காகவும்தான்.

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *