தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்வது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று உயர் கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து கடந்த மார்ச் மத்தியிலிருந்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் பள்ளிகளில் நடைபெறவிருந்த பொதுத் தேர்வுகளும், கல்லூரிகளில் பருவத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. முதலில் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு மாநிலங்களும் பள்ளி பொதுத் தேர்வை ரத்து செய்தன. அதுபோன்று ஐஐடி கல்வி நிறுவனங்கள் உட்பட முக்கிய பல்கலைக்கழகங்களும் பல்வேறு மாநில அரசுகளும் இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிரக் கல்லூரி பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்து வருகின்றன.
இந்த சூழலில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுந்தது. தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் ட்விட்டரில் வலியுறுத்தி வந்தனர். தேர்வு தொடர்பான மீம்ஸ்கள் இணையத்தில் வலம் வந்தன.
இந்த சூழலில் இது தொடர்பாகப் பேசியுள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் கே .பி .அன்பழகன், தமிழகத்தில் வைரஸ் தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கும் மையங்களாக பல்வேறு கல்லூரிகள் மாற்றப்பட்டுள்ளன. அதே சமயத்தில் தனிமைப்படுத்தும் வார்டுகளாகவும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கல்லூரி தேர்வுகளை நடத்துவது என்பது அரிதான காரியம். அதே சமயத்தில் தேர்வை ரத்து செய்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. முதல்வருடன் ஆலோசித்த பிறகு இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
**கவிபிரியா**
�,