கோவின் இணையதளத்தில் உள்ள தகவல்கள் கசிந்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை என்று மத்திய சுகாதார அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி திட்டத்தை கண்காணிக்க அரசு துறைகளுக்கு உதவிடும் நோக்கில் கோவின் செயலி உருவாக்கப்பட்டது. கோவின் இணையதளத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர்களின் பெயர், தொலைபேசி எண் ஆகியவை பதிவு செய்யப்படும். இதன்மூலம்தான் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழும் வழங்கப்படுகிறது. இதில் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது ஒரே செல்போனில் 6 பேர் வரை கோவின் இணையதளத்தில் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவின் இணையதளத்தில் உள்ள தகவல் கசிந்ததாகவும், அந்த தகவல்கள் ரெய்டு ஃபோர்ம்ஸ் இணையதளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியானது. ‘ரெய்டு பாரம்ஸ்’ இணையதளத்தில் சைபர் கிரிமினல் ஒருவர் தன்னிடம் 20,000 பேரின் தகவல்கள் விற்பனைக்கு இருப்பதாக கூறி உள்ளார்.
இதனை, சைபர் பாதுகாப்பு ஆய்வுகளை மேற்கொள்ளும் ராஜசேகர் ராஜஹரியா என்பவர் கண்டறிந்து தனது டிவிட்டரில் எச்சரிக்கை செய்துள்ளார். மேலும், ஆன்லைனில் இதுபோன்ற தனிநபர் தகவல்கள் வெளியாவதை உடனடியாக தடுக்கும்படி கூகுள் நிறுவனத்திற்கும், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கும் இமெயில் மூலம் புகார் அளித்துள்ளார்.
கோவின் இணையதளத்தில் சேமிக்கப்பட்ட தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்,” கோவின் இணையதளத்தில் இருந்து எந்த தகவலும் கசியவில்லை. அனைத்து தகவல்களும் பாதுகாப்பாக உள்ளது. இருப்பினும் இந்த செய்தி குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு ஒருமுறை கோவின் இணையதளத்தில் பதிவு செய்த சுமார் 15 கோடி இந்தியர்களின் மொபைல் எண்கள்,ஆதார்,இருப்பிடம் போன்ற தகவல்களை “டார்க் லீக் மார்க்கெட்” என்ற அமைப்பு ஹேக் செய்துள்ளதாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,