ஐஆர்சிடிசி: 24 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு!

Published On:

| By admin

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைவரும் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டிருந்தது. தற்போது இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில் வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அதிக பேர் பயணிக்கத் தொடங்கினர். தற்போது ஒரு சில இடங்களில் கொரோனா அதிகரித்து வந்தாலும், இந்தியாவில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் இந்திய ரயில்வே நிறுவனமான ஐஆர்சிடிசி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, ஆதார் இணைக்கப்படாத பயனர்கள் ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம், ஆதார் இணைக்கப்பட்ட பயனர்கள் ஒரு மாதத்துக்கு 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த நிலையில், பயனர்கள் முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளின் உச்ச வரம்பை அதிகரிப்பதாக ஐஆர்சிடிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், முன்பதிவு செய்யும் நபர் குறித்து ஆதார் அட்டைகள் மூலம் சரிபார்க்கப்படுவர் என்று ஐஆர்சிடிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐஆர்சிடிசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுவரை ஆதார் இணைக்கப்படாத பயனர்கள் ஆறு டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று இருந்த உச்சவரம்பு 12 டிக்கெட்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஆதார் இணைத்திருக்கும் பயனர்கள் 12 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று இருந்த உச்சவரம்பு 24 டிக்கெட்டுகளாக மாற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share