சிறப்பு ரயில்களில் பயணிக்கும் பயணிகள் தனிமைப்படுத்தப்படும் நெறிமுறைகளுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிமாநிலங்களிலிருந்து சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்படும் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பாதிப்பு இல்லாதபட்சத்தில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இந்த நிலையில் கடந்த மே 14ஆம் தேதி ராஜ்தானி ரயிலில் பெங்களூரு வந்த 543 பயணிகளில் 140 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்குச் செல்ல அனுமதி மறுத்தனர். தனிமைப்படுத்தல் முகாமுக்குச் செல்லும் வரை இந்த பயணிகள் ரயில்வே பொறுப்பில் வைக்கப்பட்டனர். மாநில அரசு அவர்களை ரயில் நிலையத்திலிருந்து வெளியேற அனுமதி மறுத்துவிட்டது. இதையடுத்து, அவசர நடவடிக்கையாக ராஜ்தானி விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைத்து அவர்களை மீண்டும் டெல்லிக்கு அனுப்பி வைத்தது.
இந்த நிலையில் இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க ஐஆர்சிடிசி அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்யும்போது, சில நெறிமுறைகளை ஒப்புக்கொண்டால்தான் பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, “பயணிகள் சென்றடையும் இடத்தில் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளைப் படித்து, அந்த விதிமுறைகளுக்கு உடன்படுகிறேன். இதற்கு ஒப்புக்கொண்டு டிக்கெட்டை முன்பதிவு செய்கிறேன்” என்ற பாப் அப் பட்டனை க்ளிக் செய்து ஆம் என்று ஒப்புக்கொண்டால்தான் பயணத்துக்கு அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் இந்த புதியமுறை கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோன்று ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
**-கவிபிரியா**
�,