தங்கள் பகுதி சாலைக்காக போராடிய கல்பாக்கம் பகுதி மக்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள் போலீஸார்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் அணுமின் நிலையத்தில் பணியாற்றுபவர்களின் வீடுகள் அமைந்துள்ள கல்பாக்கம் நகரியப் பகுதி டவுன்ஷிப் அமைந்துள்ளது. அப்பகுதியில் மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலை உள்ளது. அண்மையில், பாதுகாப்புக் காரணங்கள் எனக்கூறி சாலையின் நுழைவு வாயிலை அணுமின் நிலைய நிர்வாகம் மூடியது. சில கட்டுப்பாடுகளுடன் மக்கள் சாலையின் வழியாக அனுமதிக்கப்பட்டனர். மேலும், இரவு 11 மணிக்கு மூடப்பட்டு காலை 5 மணிக்கும் திறக்கப்பட்டது. இதனால் சுற்றுவட்டார கிராமப் பகுதியினர் பெரும் சிரமங்களை சந்தித்தனர்.
சாலையில் நுழைய முடியாதவாறு புதிய புதிய நுழைவாயில்கள் உருவாக்கி அவற்றை மூடியதை எதிர்த்து கடந்த 16ஆம் தேதி புதுப்பட்டினம்,சதுரங்கப்பட்டினத்தில் உள்ள முக்கிய நுழைவாயிலை மூடி சுற்றுவட்டார கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதுபற்றி மமக பொதுச் செயலாளரும், கல்பாக்கத்தைச் சேர்ந்தவருமான அப்துல் சமது கருத்து தெரிவிக்கையில், “ கல்பாக்கம் நகரிய பகுதி என்பது சுற்றுவட்டார கிராம மக்களின் முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த பகுதியாகும். அங்கே தான் அவர்களின் வீடுகள், வயல்கள், வழிபாட்டுத்தளங்களான கோவில்கள்,மசூதி,தேவாலயங்கள்,அடக்கத்தளங்கள் என எல்லாம் இருந்தது அனைத்தையும் அணுமின் நிலைய நகரியத்திற்காக கொடுத்தவர்கள் தான் இங்கு வாழும் சுற்றுப்புற கிராம மக்கள். . இப்போதும் அப்பகுதியில் உள்ள வழிபாட்டுத்தளங்களுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். மேலும் அங்குதான் இந்த மக்களுக்கான தமிழ்நாடு அரசுப்பள்ளிகள்,அரசு நூலகம்,காவல்நிலையம்,பேருந்து நிலையம்,கிராம குழந்தைகளும் படிக்கும் மத்திய அரசு பள்ளிகள் ,அவசர சிகிச்சைக்கான மருத்துவமனை, வங்கிகள், அஞ்சல் நிலையம் என அனைத்தும் உள்ளது.
இந்நிலையில் அங்கு செல்வதை தடுக்கும் வகையில் நுழைவாயிலை மூடுவதும், கட்டுப்பாடுகள் விதிப்பதும், தங்கள் வாழ்விடங்களை வழங்கிவிட்டு அணுகதிர்வீச்சுநோய்களை சுமக்கும் மக்களை மேலும் அவமதிப்பதாகும். அதனை எதிர்த்து போராடிய 156 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது;மேலும் இச்செயல் சுற்றுவட்டார கிராம மக்களை கோபமூட்டுவதும் ஆகும்.
எனவே அணுமின்நிலைய நிர்வாகம் உடனடியாக வழக்குகளை திரும்ப பெற வேண்டும். மறுக்கும் பட்சத்தில் பொய் வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தி பாதிக்கப்படும் மக்களை ஒன்று திரட்டி போராட வேண்டிய சூழல் ஏற்படும்” என்று கூறினார்.
இந்நிலையில் 156 பேர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெற வேண்டும் என்று 19.12.2019 அன்று மாலை அனைத்து அணுவாற்றல் துறை இயக்குனர்களுடன், காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. அரசு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அந்தப் பேச்சுவார்த்தையில் 156 பேர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெறுவதாக அணுவாற்றல் துறை இயக்குனர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால் இன்றுவரை வழக்குகள் ஏதும் திரும்பப் பெறப்படவில்லை. எம்.பி, எம்.எல்.ஏ.க்களிடம் கொடுத்த வாக்குறுதியை மூன்று நாட்களாகியும் இன்னும் கல்பாக்கம் அணுமின் நிலையம் நிறைவேற்றவில்லை என்கிறார்கள் மக்கள்.
�,”