திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், குன்னத்தூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நர்ஸ் இல்லாமல் ஆண் மருத்துவர் ஒருவர் மாணவிகளை முழு மருத்துவப் பரிசோதனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மாணவிகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்து, பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம் நடத்தியது பரபரப்பாகப் பேசப்படுகிறது.
குன்னத்தூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கு மத்திய அரசின் சார்பாக சிறார் நலத்திட்ட பரிசோதனைக்காக ஆண் டாக்டர் ஒருவர் சென்றுள்ளார். பின்னர் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளை ஆண் டாக்டர் முழு உடல் மருத்துவப் பரிசோதனை செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பெண் டாக்டரோ, செவிலியர்களோ இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த மருத்துவப் பரிசோதனை நடந்த மறுநாள், அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் பள்ளிக்குப் போக மாட்டோம் என்று தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அதற்கு என்ன காரணம் என்று மாணவிகளிடம் கேட்டுள்ளனர். அப்போது மாணவிகள் பள்ளிக்குச் சென்றால் ஆண் டாக்டர் ஒருவர் உடல் முழுவதும் மருத்துவப் பரிசோதனை செய்ததாகவும், இதனால் பள்ளிக்கு போக மறுப்பு தெரிவிப்பதாகவும் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர் தங்களது குழந்தைகளுடன் பள்ளிக்குச் சென்றனர். பின்னர் மாணவிகளை வகுப்பறைகளுக்கு அனுப்ப மறுத்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா, சப் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீஸார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீஸாரிடம் மாணவிகளைப் பரிசோதனை செய்யும்போது பெண் டாக்டரையோ அல்லது பெண் செவிலியரையோ அல்லது பள்ளி ஆசிரியையோ அருகில் வைத்து பரிசோதனை செய்யவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை துணை இயக்குநரிடம் பெற்றோர் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட துணை இயக்குநர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
மேலும் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று பெற்றோர் கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மாவட்டக் குழந்தைகள் நலப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
**-ராஜ்**
.