உக்ரைன் மீது ரஷ்யா 42ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்ய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் அரசும் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே, உக்ரைன் மீதான தாக்குதலை கண்டிக்கும் வகையில் ஆப்பிள், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும், கோகோ கோலா, பெப்சி போன்ற குளிர்பான நிறுவனங்களும் தங்களது சேவையை ரஷியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைத்தன.
இந்நிலையில், ரஷ்யாவில் அனைத்து புதிய வணிகங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என இன்டெல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்தது. நாங்கள் ரஷ்யாவில் அனைத்து வணிக நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டோம். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை கண்டிப்பதிலும், அமைதிக்கு விரைவாக திரும்ப அழைப்பு விடுப்பதிலும் இன்டெல் தொடர்ந்து உலகளாவிய சமூகத்துடன் இணைந்து வருகிறது என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதின் தனது லட்சியத்தை மாற்றியதற்கான எந்த அறிகுறியையும் நாங்கள் காணவில்லை என்று நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் நேற்று வெளியுறவு அமைச்சர்களின் இரண்டு நாள் கூட்டத்தில் தெரிவித்தார். உக்ரைனில் நடந்த கொடூரமான போர் குறித்து உரையாற்றிய அவர், “ரஷ்யாவின் அதிபர் புதின், உக்ரைன் முழுவதையும் கட்டுப்படுத்த சர்வதேச ஒழுங்கை மீறியுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.
நேட்டோவின் வெளியுறவு அமைச்சர்களின் ஜி7 கூட்டத்தில் அதிக தற்காப்பு ஆயுதங்களை வாங்குவது குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார். “பிரஸ்ஸல்ஸில் எனது விவாதத்தின் முக்கிய தலைப்பு உக்ரைனுக்கு தேவையான அனைத்து ஆயுதங்களையும் வழங்குவதாகும்” என்று குலேபா ஒரு வீடியோ உரையில் கூறினார்.