இந்தோனேசியா ஜாவா கடல் பகுதியில், நேற்று மாயமான விமானத்தின் பாகங்கள் மற்றும் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீ விஜயா ஏர் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737-500 ரக விமானம் உள்ளூர் நேரப்படி, பகல் 2:40 மணிக்கு சோகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து மேற்கு கேலி மாந்தன் மாகாணத்தில் உள்ள போன்டியானக் விமான நிலையத்துக்குப் புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்டு 4 நிமிடத்திலேயே அதன் ரேடார் இணைப்பை இழந்ததாகக் கூறப்படுகிறது. அதோடு விமானம் பறந்துகொண்டிருந்த உயரம் திடீரென ஒரே நிமிடத்தில் 10 ஆயிரம் அடி குறைந்தது என பிளைட் ரேடார் இணையதளம் கூறுகிறது.
விமானம் ஜாவா கடல் பகுதியில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகித்த நிலையில், அவசர மற்றும் மீட்பு சேவை பிரிவினர் கப்பலில் தேடுதல் பணியைத் தொடங்கினர். இந்நிலையில் இன்று (ஜனவரி 9) விமானத்தின் சிக்னல்கள், ஒரு மீட்டர் நீள விமான துண்டு பொருட்கள், சக்கரம் மற்றும் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், உடல் பாகங்கள் அடையாளம் காணப்படுவதற்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் காணாமல் போன விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருப்பதை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தொடர்ந்து கப்பல் மற்றும் விமான மூலம் தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விமானத்தில் 46 பெரியவர்கள், 7 குழந்தைகள், மூன்று கைக்குழந்தைகள் மற்றும் ஆறு விமான ஊழியர்கள் என மொத்தம் 62 பேர் பயணித்தனர். இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
**-பிரியா**
�,