சென்னையைச் சேர்ந்த பெண்கள் கொண்டாட்ட தருணங்கள் மற்றும் படைப்பு, திறமைகளை காட்சிபடுத்தும் வகையில் டுவிட்டரில் கருத்துக்களை பதிவிடுவதாக ஆய்வு கூறுகிறது.
இன்றைய காலத்தில் இணையத்தில் பரிட்சயமான பெரியவர்கள் முதல், செல்போனை கையாளத்தெரிந்த சிறு பிள்ளைகள் வரை வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, இந்தியர்கள் பெரும்பாலான நேரங்களை இதில்தான் செலவிடுகின்றனர் என ஆய்வுகள் கூறுகிறது. இந்நிலையில், பெண்களின் இணைய பயன்பாடு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, டுவிட்டர் தளத்தில் பெண்கள் பதிவிடும் கருத்துக்கள், விவாதங்கள், உரையாடல்கள் எதை மையமாக கொண்டு அமைந்துள்ளது என்பது பற்றி டுவிட்டர் நிறுவனம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது.
இதில், இந்தியாவிலுள்ள 19 நகரங்களில் உள்ள பெண்களின் டுவிட்டர் பயன்பாடு கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது. புத்தகங்கள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், ஃபேஷன், விருப்பங்கள், உணவு உள்ளிட்ட பல தலைப்புகளில் பெண்கள் உரையாடுவதும், விவாதிப்பதும், கருத்துகளை பதிவிடுவதும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஜனவரி 2019லிருந்து பிப்ரவரி 2021 வரை 700 பெண்களால், 522,922 டுவிட்கள் பதிவிடப்பட்டுள்ளன. அதில், 24.9 சதவீதத்தினர் ஃபேஷன் மற்றும் தங்களுடைய விருப்பங்கள் குறித்தும், 20.8 சதவீதத்தினர் நடப்பு விவகாரங்கள் குறித்தும், 14.5 சதவீதத்தினர் கொண்டாட்ட தருணங்கள் குறித்தும், 8.7 சதவீதத்தினர் சமூக மாற்றத்தை குறித்தும் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
39 சதவீத பெண்கள் கருத்து சுதந்திர கருத்துக்கு இடமளிக்கும் தளமாக டுவிட்டரை பார்க்கின்றனர். 4.2. சதவீதம் பேர் தங்களது தனிப்பட்ட தயக்கம், தடை, பயம் குறித்து பகிர்ந்து கொள்ளும் தளமாக பார்க்கின்றனர்.
பெங்களூரைச் சேர்ந்த பெண்கள் சமூக மாற்றத்தைக் குறித்தும், சென்னையைச் சேர்ந்த பெண்கள் கொண்டாட்ட தருணங்கள் மற்றும் படைப்புகளை காட்சிபடுத்தவும், டெல்லி மற்றும் குவஹாத்தியைச் சேர்ந்த பெண்கள் நடப்பு விவகாரங்கள் குறித்தும் பதிவிடுகின்றனர்.
இந்தியா பெண்கள், பயணம் செய்யும் போது 33% பேரும், காலை உணவு உட்கொள்ளும்போது 29% பேரும், படுக்கைக்கு செல்வதற்கு முன்பு 22% பேரும், படுக்கையை விட்டு எழுந்தவுடன் 24% பேரும் டுவிட்டரை பயன்படுத்துகின்றனர்.
இதுகுறித்து டுவிட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மனீஷ் மகேஷ்வரி கூறுகையில், டுவிட்டர் பயன்படுத்தும் பெண்கள் பற்றிய புரிதலை தெரிந்து கொள்வதற்காக இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டோம். அதன் முடிவுகள் நினைத்ததை விட சுவாரசியமாக இருந்தது. அனைத்து பெண்களுக்குமான தளமாகவும், தங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கும் டுவிட்டர் ஒரு சாத்தியமான சூழலை உருவாக்கியுள்ளது. டுவிட்டரில் நட்புகளை ஏற்படுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் யார் யார் தன் நட்பு வட்டாரத்தில் இருக்க வேண்டும் என்பதை கட்டுபடுத்துவதற்கு ஏற்ப புதிய வழிகளை மக்களுக்கு வழங்குவதே எங்கள் குறிக்கோளாக இருக்கிறது என கூறினார்.
**வினிதா**
�,