இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இந்திய தொழிலதிபர்கள், பணக்காரர்கள் பலர் பாதுகாப்பான நாடுகளுக்குச் செல்கின்றனர். இதற்காக அவர்கள் தனி விமானங்களைப் பயன்படுத்தி, குடும்பத்துடன் வெளியேறி வருகின்றனர்.
இதனால், பல்வேறு தனியார் நிறுவனங்களின் விமானங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கு பல லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், வெளிநாட்டு விமானங்களின் கட்டணங்களும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியா வரும் விமானங்கள் நேற்று (ஏப்ரல் 26) முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின் எதிரொலியாக ஐக்கிய அரபு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்தது.
இதன் காரணமாக வெள்ளி அன்று விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்து காணப்பட்டது. வெள்ளி, சனியன்று மும்பையில் இருந்து துபாய்க்கு இயக்கப்பட்ட வர்த்தக விமானத்தில் அதிகபட்சமாக 80,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது, வழக்கமான கட்டணத்தை விட 10 மடங்கு அதிகமாகும். டெல்லியில் இருந்து துபாய் செல்லும் விமானக் கட்டணம் 5 மடங்கு உயர்த்தப்பட்டு 50,000 ரூபாய் ஆக வசூலிக்கப்படடது.
இந்த நிலையில் இந்தியாவிலும் தனி விமானங்களில் பயணப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சோ்ந்த ஒரு தொழிலதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் போதிய இடவசதி இல்லாததால் அவரை சென்னைக்கு தனி விமானத்தில் அழைத்து வந்து சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனா்.
இதையடுத்து சூரத்தில் இருந்து கொரோனா நோயாளியான தொழிலதிபா் மற்றும் அவருடைய குடும்பத்தினா் நான்கு பேர் தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்னை வந்து சோ்ந்தனர். தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் தொழிலதிபரும் அவரது குடும்பத்தினரும் ஆஸ்பத்திரிக்குச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மாலத்தீவு சுற்றுலாத்துறை தடை விதித்துள்ளது. இன்று (ஏப்ரல் 27) முதல் இந்தத் தடை அமலுக்கு வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தடை நீங்கும் வரை மாலத்தீவுக்குச் செல்ல முடியாது என்பதால் விடுமுறையைக் கழிக்க அடிக்கடி மாலத்தீவு செல்லும் திரைப்பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
**-ராஜ்**
.�,