�இந்திய ஏற்றுமதி ரூ.31 லட்சம் கோடியாக உயர்வு: ஆடை ஏற்றுமதி மூன்று மடங்கு அதிகரிக்கும்!

Published On:

| By admin

கடந்த நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி ரூ.31 லட்சம் கோடியாக உயர்ந்துள்ள நிலையில், இந்தியாவின் ஆடை ஏற்றுமதி வரும் மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் தலைவர் நரேந்திர கோயங்கா கூறியுள்ளார்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏஇபிசி) தலைவர் நரேந்திர கோயங்கா, “இந்த ஒப்பந்தம் மூலம் ஆயத்த ஆடைகள் உள்பட 96 சதவிகிதம் இந்தியப் பொருட்கள் வரி விலக்கு பெறும். இந்த ஒப்பந்தம் வரவேற்கத்தக்கது. உலகின் தெற்கு பிராந்தியத்தில் மிகப்பெரிய ஆடை இறக்குமதியாளராக ஆஸ்திரேலியா உள்ளது. இந்திய ஆடைகளுக்கு தற்போது ஆஸ்திரேலியாவில் 4.8 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. அதேநேரம் சீனா மற்றும் வங்கதேசத்தில் இருந்து வரும் ஆடைகளுக்கு பூஜ்ய வரி, அதாவது வரிவிலக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் மூலம் அந்த வேறுபாடு களையப்படுவதுடன் உலக போட்டியாளர்களுக்கு இணையாக இந்திய ஆடைத் துறை போட்டித்தன்மை வாய்ந்ததாக மாறும். ஆஸ்திரேலியா தனது ஆடை இறக்குமதிக்காக சீனாவைப் பெரிதும் நம்பியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மொத்த ஆடை இறக்குமதியில் மூன்று சதவிகிதம் பங்கை இந்தியா தக்கவைத்துள்ளது. செயற்கை இழையால் உருவாக்கப்படும் டி-ஷர்ட்டுக்கு ஆஸ்திரேலியாவில் ஒரு பெரிய சந்தை உள்ளது. அதேபோல் பின்னலாடையால் உருவாகும் ஜெர்சிகள், புல்ஓவர்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது” என்று கூறியவர்,
மேலும், “இந்திய ஆடைத் துறை வசந்தகால மற்றும் கோடைக்காலத்துக்கு ஏற்ற ஆடைகளை நல்ல முறையில் தயாரித்து வருகிறது. ஆனால் குளிர்கால ஆடைகளை அவ்வளவாக தயாரிப்பதில்லை. இதனால் இந்திய தொழிற்சாலைகள் குளிர்கால பொருட்களை உற்பத்தி செய்யும்போது அதன் முழு திறனையும் பயன்படுத்துவதில்லை. ஆஸ்திரேலியாவில் வசந்தகால மற்றம் கோடைக்கால ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
ஆண்டு முழுவதும் இந்தியா ஆடை உற்பத்தியை பயன்படுத்திக்கொள்ளலாம். வரும் மூன்று ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கான இந்திய ஆடை ஏற்றுமதி மூன்று மடங்கு அதிகமாகும். இந்த ஒப்பந்தம் ஏற்றுமதி, வேலைவாய்ப்பு மற்றும் நாட்டின் ஆடைத்தொழிலில் முதலீடு ஆகிவற்றுக்கு மேலும் ஊக்கமளிக்கும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2021-2022 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதியை 400 பில்லியன் டாலராக (ரூ.30 லட்சம் கோடி) உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. நிதியாண்டு முடிவடைவதற்கு ஒன்பது நாட்கள் இருக்கும்போதே கடந்த மாதம் 23ஆம் தேதி இந்த இலக்கு எட்டப்பட்டது. கடந்த நிதி ஆண்டு முடிந்த நிலையில், ஏற்றுமதி 418 பில்லியன் டாலராக (ரூ.31 லட்சத்து 35 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது.
பெட்ரோலிய பொருட்கள், இன்ஜினீயரிங் பொருட்கள், நகை மற்றும் ரத்தினங்கள், ரசாயனங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகமாக இருந்ததே இதற்கு காரணம் என்று ஒன்றிய அரசு கூறியுள்ளது.

**- ராஜ்-**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share