நா.ரகுநாத்
இந்தியாவிலேயே பொருட்களை உற்பத்தி செய்து உலக சந்தையில் விற்க இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்புவிடுத்துத் தொடங்கப்பட்டது ‘மேக் இன் இந்தியா’ திட்டம்.
நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் பொருட்கள், சேவைகள் ஏற்றுமதியின் பங்கு 2013-14இல் 25.18 விழுக்காடாக இருந்தது; அது சரிந்துகொண்டே வந்து தற்போது 19.5 விழுக்காடாக இருக்கிறது. பொருட்களின் ஏற்றுமதியை மட்டும் எடுத்துக்கொண்டால், மொத்த உற்பத்தி மதிப்பில் அதன் பங்கு (Goods export to GDP ratio) 2003-04இல் 10 விழுக்காடு; அடுத்த பத்தாண்டுகளில் அதன் பங்கு வேகமாக வளர்ந்து 2013-14இல் 18 விழுக்காடாக உயர்ந்தது. அடுத்த ஆறாண்டுகளில் அதன் பங்கு சரிந்து, 2019-20இல் 11 விழுக்காடாகக் குறைந்துள்ளது. ‘மேக் இன் இந்தியா’ எனும் சிங்கம் கர்ஜிக்கவேயில்லை!
இதற்கிடையில், பொருளாதார ஆய்வறிக்கை 2019-20 பெரிய கனவுக்கோட்டை ஒன்றைக் கட்டியுள்ளது. ‘அசெம்பிள் இன் இந்தியா’ வியூகத்தின் வழியே அடுத்த ஐந்தாண்டுகளில் முறைசார்ந்த உற்பத்தித் துறையில் (Organised Manufacturing Sector) புதிதாக 4 கோடி வேலைவாய்ப்புகளை இந்தியா உருவாக்க முடியும் என்கிறது ஆய்வறிக்கை. உழைப்பு அதிகமாக செலுத்த வேண்டிய பொருட்களை (Labour Intensive Goods) உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதன் மூலமாக இது சாத்தியமாகும் என்பதே அதன் கனவு.
இந்தியாவில் உற்பத்தித் துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2017-18இல் 6 கோடி; அதிலும் பதிவுசெய்யப்பட்ட ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1.5 கோடி. இவை அரசின் அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள். சுதந்திரம் பெற்று எழுபதாண்டுகளுக்கு பிறகும் முறைசார்ந்த உற்பத்தித் துறையில் இருக்கும் உழைப்பாளி மக்களின் என்ணிக்கை 1.5 கோடி மட்டுமே. இதைவிடக் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமான புதிய வேலைவாய்ப்புகளை இதே துறையில் அடுத்த ஐந்தாண்டுகளில் மோடி சர்கார் உருவாக்கும் எனும் நேர்மறைக் கணிப்பை நமக்கு வழங்குகிறது ஆய்வறிக்கை.
மேலும், இந்தப் புதிய வேலைகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருப்பதை உறுதிசெய்வதோடு, உலக சந்தையில் அடுத்த சீனாவாக இந்தியா உருவெடுப்பதையும் சாத்தியப்படுத்தும். இதற்கு ஏதேனும் முகாந்திரம் இருக்கிறதா?
**ஏற்றுமதியை மையப்படுத்திய வளர்ச்சியை ஆதரிப்பவர்களின் வாதம்**
உற்பத்தித் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதில் மையநீரோட்டப் பொருளாதார நிபுணர்களிடையே குறிப்பிடும்படியாக கருத்து வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. அந்த இலக்கை அடைய எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில்தான் அவர்கள் வேறுபடுகின்றனர். உலக சந்தையைக் குறிவைத்து ஏற்றுமதியை அதிகரிக்கும் வியூகத்தை ஒரு சாராரும், உள்நாட்டு சந்தையை மையப்படுத்திய உற்பத்தியை இன்னொரு சாராரும் ஆதரிக்கின்றனர். இவற்றைக் கொஞ்சம் விரிவாக அலசுவோம்.
ஏற்றுமதி வழியே பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பவர்கள், சமீபகாலமாக இறக்குமதிகள்மீது இந்தியா தொடர்ந்து சுங்கவரியை உயர்த்துவதைக் கண்டிக்கின்றனர். இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவதாக, மற்ற நாடுகளின் பொருட்கள்மீது இந்தியா அதிகமாக வரி விதித்தால், அந்நாடுகள், இந்தியா உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் பொருட்கள்மீதான சுங்கவரியை உயர்த்தும்; அதனால் ஏற்றுமதி பாதிக்கப்படும்.
இரண்டாவதாக, ஏற்றுமதிக்காகவே பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், உற்பத்திக்குத் தேவையான இடைநிலைப் பொருட்களை (Intermediate Goods) இறக்குமதி செய்ய நேரிடும்போது, சுங்க வரி அதிகமாக இருக்கும்பட்சத்தில் அவர்களுடைய உற்பத்திச் செலவு அதிகரிக்கும். அதன் விளைவாக அவர்களால் உலக சந்தையில் போட்டிபோட இயலாமல் போய்விடும். மூன்றாவதாக, இறக்குமதிமீது அதிகமாக வரி விதித்தால், நுகர்வோர் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டி இருக்கும்.
வரலாற்று ரீதியாகவும் அவர்கள் இரு முக்கிய வாதங்களை முன்வைக்கின்றனர். 1991-க்குப் பிறகு சுங்க வரிகளைக் கணிசமாகக் குறைத்ததால்தான் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்து, பொருளாதார வளர்ச்சியும் வேகம் பிடித்தது. மேலும், உற்பத்தித் துறையில் உற்பத்தியை அதிகரித்து, அவற்றை ஏற்றுமதி செய்தே உலகில் பல நாடுகள் வளரும் நாடுகள் எனும் நிலையிலிருந்து வளர்ந்த நாடுகள் என்ற நிலைக்கு முன்னேறியுள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவைவிட உலக சந்தை என்பது பல மடங்கு பெரியது; அதனால், ஏற்றுமதிதான் பொருளாதார வளர்ச்சியின் உந்துசக்தியாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் நிலைப்பாடு.
**இந்தியாவின் ஏற்றுமதிக் கதை – 1991-2020**
1991-க்குப் பிறகு இந்தியாவின் ஏற்றுமதி வேகமாக அதிகரித்தது எனும் வாதம் முன்வைக்கப்படுகிறது. 2003-2013 காலத்தில் ஏற்றுமதியின் பங்கு அதிகரித்ததால், சீனாவுக்கு அடுத்ததாக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் உருவெடுத்தது. இன்று அமெரிக்க – சீன வர்த்தகப் போரின் காரணமாக நிலவும் நிச்சயமற்ற உலக வர்த்தகச் சூழலால் பெரிய அளவில் பொருட்களை உற்பத்தி செய்து உலக சந்தையில் விற்க முடியாத நிலையில் இந்தியா இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் சுங்க வரியை உயர்த்தினால் ஏற்றுமதி மேலும் பாதிக்கப்படும் எனும் கருத்து பரவலாக உள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை?
முதலாவதாக, இந்திய நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் பொருட்கள்/சரக்கு ஏற்றுமதியின் பங்கு அதிகரித்து, பின் சரிந்த காலத்தில், உலக ஏற்றுமதியில் இந்திய ஏற்றுமதியின் பங்கு சராசரியாக 1.5 – 2 விழுக்காடாகத்தான் இருந்தது. இரண்டாவதாக, தங்கள் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் சீனா, பிரேசில், இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா போன்ற மற்ற வளரும் நாடுகளின் பொருட்கள்/சரக்கு ஏற்றுமதியின் பங்கு இந்தியாவில் இருப்பதைவிட சராசரியாக 5-10 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகம். மூன்றாவதாக, இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி வேகமாக வளர்ந்த காலத்திலும், ஏற்றுமதி செய்யப்பட்ட மற்ற பொருட்களின் டாலர் மதிப்பைவிட, பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதியின் டாலர் மதிப்பு வேகமாக உயர்ந்ததன் காரணமாகவே ஏற்றுமதியின் மதிப்பும் அதிகரித்தது என்பதைக் கவனிக்க வேண்டும்.
இந்தியாவின் உற்பத்தித் துறை (Manufacturing Sector) மற்ற நாடுகளின் உற்பத்தித் துறையோடு உலக சந்தையில் போட்டிபோட்டு வெற்றிபெற முடியாததையே இந்த விவரங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.
**உள்நாட்டு சந்தையின் முக்கியத்துவம்**
இந்தியா எனும் உள்நாட்டு சந்தையைவிட உலக சந்தை பெரியதுதான். ஆனால், அந்த உலக சந்தை என்பது பல நாடுகள் போட்டிபோடும் களம்; அங்கு அனைவராலும் வெற்றிபெற முடியாது. நிச்சயமற்ற உலக வர்த்தகச் சூழலில் ஏற்றுமதியை மையப்படுத்திய வளர்ச்சி வியூகம் எதிர்பார்த்த பலன்களைத் தராது.
இதற்கு முற்றிலும் மாறாக, உள்நாட்டு சந்தை என்பது அந்தந்த நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒன்று. உள்நாட்டில் அந்நிய முதலீடுகள் எவ்வளவு அனுமதிக்க வேண்டும் என்பது அந்தந்த நாட்டு அரசின் கொள்கை முடிவைப் பொறுத்தது. மேலும், அந்தந்த நாட்டின் அரசுகள், உள்நாட்டு சந்தையை விரிவுபடுத்தும்விதமாக தங்கள் பொருளாதாரக் கொள்கையை வடிவமைக்க முடியும்.
உள்நாட்டு சந்தையின் இன்றியமையாமையை உணராமல், உள்நாட்டு உற்பத்தித் திறனை (Domestic Production Capabilities) வளர்த்தெடுக்காமல், பொருளாதாரம் உலக சந்தையில் போட்டிபோடும் பக்குவம் அடைவதற்கு முன்பே ஏற்றுமதியை மையப்படுத்திய வளர்ச்சி வியூகத்தைப் பயன்படுத்தி வெற்றிகண்ட நாடுகள் வரலாற்றில் இல்லை.
இந்தியா சுங்கவரியை உயர்த்தக் கூடாது, உள்நாட்டு சந்தையை மையப்படுத்தி உற்பத்தி செய்யக் கூடாது என்று எழுதுபவர்கள், வேண்டுமென்றே வரலாற்றை மறைத்து, கொள்கை ஆலோசனை வழங்கும் நவதாராளவாதிகள். அவர்கள் மறைக்கும் வரலாறு எப்படிப்பட்டது?
**ஏற்றுமதி செய்து வளர்ந்த மேற்கத்திய நாடுகளின் பேசப்படாத வரலாறு**
15ஆம் நூற்றாண்டு தொடங்கி 20ஆம் நூற்றாண்டு வரையிலும், ஏற்றுமதி செய்து வளர்ந்த பொருளாதாரங்கள் அனைத்தும், தங்களுடைய பொருளாதார மேம்பாட்டின் ஆரம்பக் கட்டங்களில் ஒரேமாதிரியான உத்திகளையே பயன்படுத்தின. இறக்குமதிமீது அதிகமான சுங்க வரி விதிப்பது, தேர்ந்தெடுத்த சில துறைகளில் மட்டும் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பது, நவீன தொழில்நுட்பம் தேவைப்படும் புதிய உற்பத்தி சார்ந்த துறைகளுக்கு மானியங்கள் வழங்குவது, அந்தத் துறைகளை வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டியிலிருந்து பாதுகாப்பது எனத் தங்கள் பொருளாதாரங்களைப் பாதுகாத்து, வளர்த்து, வலுப்படுத்திக்கொண்டன.
இதற்கெல்லாம் பல பத்தாண்டுகள் தேவைப்பட்டன; உண்மையில் இந்த நிலையை அடைய மேற்கத்திய நாடுகளுக்கு இரண்டு நூற்றாண்டுகள் தேவைப்பட்டது. அதன் பிறகுதான் தங்குதடையற்ற வர்த்தகத்தின் (Free Trade) மகிமையை மற்ற நாடுகளுக்கு போதிக்கத் தொடங்கின. உலகின் பல பகுதிகளைக் கையகப்படுத்தி, தங்கள் காலனிகளாக மாற்றி, அந்த காலனிகளின் வளங்களைச் சுரண்டி தொழில்மயமான நாடுகள், அந்த வரலாற்றைப்பற்றி பேசுவதேயில்லை. இவர்கள் பல கட்டுப்பாடுகளை விதித்துத் தங்கள் பொருளாதாரத்தை வலுப்படுத்துவார்களாம்; இன்றைய வளரும் நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி தங்குதடையற்ற வர்த்தகத்தை அனுமதிக்க வேண்டுமாம்.
ஏற்றுமதி செய்து வெற்றி பெற்ற மேற்கத்திய நாடுகள், தங்குதடையற்ற வர்த்தகத்தை அனுமதித்ததால் வளரவில்லை; தங்களுடைய ராணுவ பலத்தால் ஏகாதிபத்திய முறைகள், அடிமைத்தனம் போன்ற வன்முறை நிறைந்த உத்திகளைக் கையாண்டு வளர்ச்சியின் உச்சாணிக்கொம்பில் சென்று அமர்ந்தன. ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராகப் போராடி சுதந்திரம் பெற்று, தங்களுக்கென ஒரு தனிப்பாதையை வகுத்துக்கொண்டு வளர்ந்துவந்த லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள்மீது, வளர்ந்த மேற்கத்திய நாடுகள், அவர்களின் ஊதுகுழல்களாக செயல்படும் உலக வங்கி, பன்னாட்டு நிதியம் (IMF) மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) நவதாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளை (Neoliberal Economic Policies) வலுக்கட்டாயமாகத் திணித்து அவர்களின் வளர்ச்சியை முடக்கிவிட்டன.
**வேகமாக வளர்ந்த ஆசிய நாடுகளின் வளர்ச்சி வியூகம்**
ஜப்பான், தென்கொரியா, தைவான், சிங்கப்பூர் போன்ற நாடுகள் 1960களின் பிற்பாதியில் தொடங்கி அடுத்த இரண்டு பத்தாண்டுகளுக்கு, வளர்ந்த நாடுகளிடமிருந்து தொழில்நுட்பங்களைப் பெற்று, தீவிரமான மனித உழைப்பு தேவைப்படும் பொருட்களை உற்பத்தி செய்து, உலக சந்தையில் அவற்றை விற்று வேகமாக வளர்ந்தன.
ஊரகப் பகுதிகளில் நிலச் சீர்திருத்தம் செய்து, வேளாண் துறையில் உற்பத்தித்திறனை அதிகரித்து, அனைவருக்கும் இலவச கல்வி மற்றும் சுகாதாரம் வழங்கி, தொழிற்துறையில் கணிசமான எண்ணிக்கையில் வேலைகளை உருவாக்கி தனிநபர் வருமானத்தைப் பெருக்கியதோடு, அந்நாடுகள் வறுமையையும் பெரிய அளவில் குறைத்தன. இந்த மாற்றங்களை ஏற்படுத்தியதில் அந்நாட்டு அரசுகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. இவையனைத்தும் மக்கள் சீனத்தின் வளர்ச்சிக்கும் பொருந்தும்.
**வன்முறையற்ற வளர்ச்சி சாத்தியமா?**
மேற்கூறிய ஆசிய நாடுகள் பலவும், 1960-2010 காலத்தில் தங்களுடைய பொருளாதார முன்னேற்றத்துக்கான பயணத்தின்போது, பல ஆண்டுகளுக்கு சர்வாதிகார ஆட்சியின் மேற்பார்வையில்தான் இயங்கின. பொருளாதார ஏற்றுமதியை மையப்படுத்திய வளர்ச்சியை அடைவதற்காக மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. தங்குவதற்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாத இருப்பிடங்களில் தொழிலாளர்கள் அடைக்கப்பட்டு, நாளொன்றுக்குச் சொற்பமான கூலிக்கு 14 மணி நேரம் இடைவெளியின்றி அவர்களை ஆலைகளில் வேலை செய்யவைத்த அவலங்களைப் பற்றிப் பேசாமல் அந்நாடுகளின் வளர்ச்சி பற்றிய கதையாடல் முற்றுப்பெறாது.
தென்கொரியா நாட்டைச் சேர்ந்த ஹா ஜூன் சாங் எனும் தலைசிறந்த பொருளாதார நிபுணர், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக ஒரு தலைமுறையே தங்களுடைய சுதந்திரம், உரிமைகளைத் தியாகம் செய்ததைப் பற்றி தன்னுடைய புத்தகங்களில் எழுதியுள்ளார். அந்த வரலாறு வலியும் வேதனையும் நிறைந்தது.
பொருளாதார வளர்ச்சி என்பது வன்முறையால் சாத்தியமாவது என்பதே வரலாற்றுப் பாடம் என்றால், 21ஆம் நூற்றாண்டில் வன்முறையைச் சார்ந்திராத வளர்ச்சி வியூகத்தை இந்தியா எப்படி வகுத்துச் செயல்படுத்த முடியும் என்பதே நம்முன் இருக்கும் மிகப்பெரிய சவால். மனிதர்கள்மீது மட்டுமல்ல, இயற்கையின் மீதும் வன்முறையைப் பயன்படுத்தாத வளர்ச்சிப் பாதையில் பயணிப்பது அவசியம்.
**கட்டுரையாளர் குறிப்பு**
நா.ரகுநாத், பொருளியல் முதுகலைப் பட்டதாரி. இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் பற்றி ஆய்வு செய்வதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தற்போது, பட்டயக் கணக்காளர் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பொருளியல் பாடங்களில் பயற்சி அளித்து வருகிறார்.
மின்னஞ்சல் முகவரி: raghind@gmail.com�,