2021-22இல் இந்தியாவின் ஏற்றுமதி 66,965 கோடி டாலராக புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ஒன்றிய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2021 ஏப்ரலில் இருந்து 2022 மார்ச் வரையில் இந்தியாவின் சேவைத் துறையின் ஏற்றுமதி அளவு 25,000 கோடி டாலராக இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. 2021-22 நிதியாண்டை விட இது 21.31 சதவிகிதம் அதிகமாகும்.
பண்டங்கள் மற்றும் சேவைகளின் மொத்த ஏற்றுமதி கடந்த நிதியாண்டை விட 2021-22இல் 34.5 சதவிகிதம் அதிகரித்து 66,965 கோடி டாலராக உயர்ந்துள்ளது. 2022 மார்ச் மாதத்தில் மொத்த ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 15.51 சதவிகிதம் அதிகரித்து 6,475 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
2021-22இல் மொத்த இறக்குமதி கடந்த ஆண்டை விட 47.8 சதவிகிதம் அதிகரித்து 75,668 கோடி டாலராக அதிகரித்துள்ளது. மொத்த ஏற்றுமதி அளவுக்கும், மொத்த இறக்குமதி அளவுக்கும் இடையே உள்ள வேறுபாடான வர்த்தக பற்றாக்குறை அளவு 2021-22இல் கடந்த நிதி ஆண்டை விட 518.87 சதவிகிதம் அதிகரித்து 8,703 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக சுற்றுலாத்துறை, விமான போக்குவரத்துத் துறை உள்ளிட்ட சேவைத்துறைகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருந்தும் சேவைத் துறை ஏற்றுமதி அளவு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகத் துறை மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஐபிஎல் ஜுரம் வாட்டி வதைப்பதை போல, சர்வதேச அரங்கில் இந்தியாவின் புகழும் புதிய உச்சங்களை எட்டுவதாகக் கூறியுள்ளார்.
சேவைகள் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் நிர்வாக ஆலோசகர்கள், கணக்காளர்கள், நிறுவனச் செயலாளர்கள், இன்ஜினீயர்கள் மற்றும் கட்டடக் கலைஞர்கள் போன்ற அனைத்து தொழில் வல்லுநர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
**ராஜ்**
.