கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பரவிய நிலையில் பல நாடுகள் பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்தன. பின்னர் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி, ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்து பொருளாதாரத்தை மீட்கும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. மேலும் ரஷ்யா – உக்ரேன் போரும் பல நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், அதனை சீர் செய்யும் வகையில் பல நடவடிக்கைகளை அந்தந்த நாடுகளின் அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
அதேபோல இந்தியாவும் மூன்று கொரோனா அலைகளை சந்தித்தபின் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 3 கொரோனா அலைகளை சந்தித்த போதும், இந்திய பொருளாதாரம் வலுவாக மீண்டு வருகிறது என்று அமெரிக்க நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நிதி அமைச்சகம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 2020ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் -7 சதவீதமாக இருந்த நிலையில், ஒரே ஆண்டில் 8 சதவீதமாக உயர்ந்தது. 3 கொரோனா அலைகளை சந்தித்த இந்தியா, பொருளாதார ரீதியாக வலுவான முன்னேற்றத்தை சந்தித்து வருகிறது. 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 44 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி விட்டது. இது பொருளாதார மீட்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இந்தியாவில் கொரோனா 3ஆவது அலை 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பித்தது. இருப்பினும் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதால் குறைவான பாதிப்புகளே பதிவாகின. உலகளவில் உருமாறிய ஒமிக்ரான் வகை தொற்று மக்களை அச்சுறுத்திய போதும், இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு மிகக் குறைவாகவே இருந்தது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
.