பொருளாதாரக் கொள்கை தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் மத்திய பாஜக அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
நாட்டில் தற்போது பொருளாதார மந்தநிலை நிலவிவரும் நிலையில், அதைச் சமாளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், பொருளாதார மந்தநிலை நிலவவில்லை என்று பாஜக தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில் பொருளாதார மந்தநிலை குறித்து மத்திய அரசை விமர்சித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர், தி இந்து ஆங்கில நாளேட்டில் ‘பொருளாதாரத்துக்கு வழிகாட்டும் ஒரு துருவநட்சத்திரம்’ என்ற தலைப்பில் நேற்று (அக்டோபர் 14) கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர், அரசியல் பொருளாதார ஆய்வறிஞர் ஆவார். ஆந்திர அரசின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
தனது கட்டுரையில் முன்னாள் பிரதமர் நேருவின் பொருளாதாரக் கட்டமைப்பை விமர்சித்ததற்காக ஆளும் கட்சியை விமர்சித்துள்ளார். இந்த விமர்சனம் இன்னும் அரசியல் தாக்குதலாகவே உள்ளது என்பதை கட்சியின் சிந்தனைக்குழு உணரத் தவறி விட்டது என்றும் கூறியுள்ளார்.
“பாஜக அரசின் அரசியல் திட்டங்களுக்கு சர்தார் வல்லபபாய் படேல் அடையாள சின்னமாக இருப்பது போல, அக்கட்சியின் பொருளாதாரக் கட்டமைப்புக்கு நரசிம்மராவ் அடிப்படையான கட்டமைப்பாக இருக்கலாம்” என்று கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பரகலா பிரபாகர்,
“நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் புதிய கொள்கைகளை வடிவமைப்பதில் விருப்பம் காட்டவில்லை. தற்போது மோசமான பொருளாதார நிலைமையிலிருந்து வெளிவர பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு ஒரு முழுமையான முன்மாதிரி தேவைப்படுகிறது. இந்தக் கட்டமைப்பு பாஜகவின் பொருளாதார சிந்தனையில் உள்ள பலவீனத்தை நீக்க உதவும். இல்லையெனில், தொலைக்காட்சியில் கூச்சலிடும் ஆய்வாளர்கள் மற்றும் வாட்ஸ் அப் பார்வேர்டுகள் மூலமான பொருளாதாரச் சிந்தனைகள்தான் பாஜகவுக்குத் தொடர்ந்து கிடைக்கும்” என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் குறித்த கருத்துகளை ஏற்றுக்கொள்ள பாஜகவுக்கு விவரிக்க முடியாத தயக்கம் உள்ளதாகவும் சாடியுள்ள அவர், “பொருளாதாரத்துக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதற்கான அறிகுறிகளை மத்திய அரசு இன்னும் காட்டவில்லை. பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ள தேவையான தொலைநோக்குப் பார்வை மத்திய அரசிடம் உள்ளது என்பதை நம்புவதற்குக் குறைந்த அளவிலான சான்றுகளே உள்ளன. தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலையைச் சரி செய்ய முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங் மற்றும் நரசிம்ம ராவ் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுவதுதான் மோடி அரசுக்குச் சரியான வழியாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சரின் கணவரே இதுபோன்ற கருத்துகளை வெளியிட்டுள்ளது விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. கணவரின் கட்டுரை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள நிர்மலா சீதாராமன், “2014 முதல் 2019 வரை பொருளாதாரத்தில் நாங்கள் அடிப்படை சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம்” என்று குறிப்பிட்டார். சரக்கு மற்றும் சேவை வரி, சமையல் எரிவாயு விநியோகம், ஆதார் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.�,