ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில், ஒரு சண்டைக் காட்சிக்கு மட்டும் 40 கோடியை செலவிடவுள்ளதாம் படக்குழு.
23 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 தயாராகி வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் கமல்ஹாசன் பங்கேற்கும் முக்கியமான சண்டைக் காட்சிகள் வளசரவாக்கத்தில் படமாக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஆந்திராவில் இந்தியன் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரியிலுள்ள மத்திய சிறையில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. சமீபத்தில் வந்த தகவலின் படி, ஆந்திராவில் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது படக்குழு.
இந்நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பை போபாலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. படத்தில் இடம்பெறும் முக்கியமான சண்டைக் காட்சியை போபாலில் நடத்த முடிவெடுத்த படக்குழு, அதற்கான ஆயத்தப் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றது. மேலும், இந்த சண்டைக் காட்சிக்கு மட்டும் 2,000 துணைக் கலைஞர்கள் ஈடுபடவுள்ளார்களாம். அதுமட்டுமின்றி, இந்த காட்சிக்கு ஆகும் செலவு 40 கோடி என்கின்றன திரையுலக வட்டாரங்கள்.
இக்காட்சியை தேசிய விருதுபெற்ற சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் வடிவமைக்கவுள்ளார். போபாலைத் தொடர்ந்து, அடுத்து தைவான் பறக்கவுள்ளது இந்தியன் 2 படக்குழு.
சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், விவேக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றனர். 200 கோடி பட்ஜெட்டில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு. முதன் முறையாக ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையமைக்கிறார். இந்தியன் 2, 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.�,