பாலின பாகுபாட்டினால் வாய்ப்பை இழக்கும் பெண்கள்!

Published On:

| By Balaji

பணியிடங்களில் பாலின பாகுபாட்டை எதிர்கொள்வதாக வேலைக்கு செல்லும் 85 சதவிகித பெண்கள் கூறுகின்றனர் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் பாலின சமத்துவம் மேம்பட்டிருந்தாலும், இன்னும் ஆசிய பசிபிக் நாடுகளில் பாலின பாகுபாடு இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை கருத்து கணிப்பு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

லிங்க்ட்இன் நிறுவனம் நடத்திய ‘லிங்க்ட்இன் ஆப்பர்சூனிட்டி இன்டெக்ஸ் 2021’ என்ற கருத்துக் கணிப்பு, ஜனவரி 16 முதல் தொடங்கி ஜனவரி 31 வரை ஆன்லைனில் நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து 18 முதல் 65 வயது வரையுள்ள 10,000 பேர் பங்கெடுத்தனர். இந்தியாவில் 2,285 பேர் மட்டுமே பங்கெடுத்தனர். அதில், 1223 ஆண்கள், 1,053 பெண்கள் அடங்குவர்.

இந்த கருத்து கணிப்பில், “இந்தியாவில் பணிபுரியும் பெண்களில் 85% பேர்(ஐந்தில் நான்கு பேர்) பாலினப் பாகுபாட்டின் காரணமாகப் பதவி உயர்வுகள், ஊதிய உயர்வு, வேலைவாய்ப்பு போன்றவற்றை இழக்கின்றனர். தாங்கள் வேலை பார்க்கும் இடங்களில் ஆண்களைதான் பணிக்கு அமர்த்திக் கொள்ள விரும்புகின்றனர் என்று 22% பெண்கள் தெரிவித்துள்ளனர். ஆண்களுடன் ஒப்பிடுகையில், தங்களுக்கான வேலைவாய்ப்புகளும், சம்பளமும் குறைவாக இருப்பதாக 37% பெண்கள் தெரிவிக்கின்றனர். வேலைக்கு செல்வதில் குடும்ப பொறுப்புகள் ஒரு குறுக்கீடாக இருப்பதாக 71% பெண்களும், குடும்ப பொறுப்பு காரணமாகவே பணியிடங்களில் தாங்கள் பாலின பாகுபாட்டுக்கு ஆளாக வேண்டியுள்ளது என 63% பெண்களும் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் பாலின சமத்துவம் தங்களது பெற்றோர் காலத்தை விட, தற்போது மேம்பட்டிருப்பதாக 66% பேர் தெரிவித்துள்ளனர் என்பது கருத்து கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது.

பணியிடங்களில் பாலின பாகுபாடு, குடும்ப பொறுப்புகள் போன்றவை பெண்களின் வேலைவாய்ப்பை பாதிக்கிறது. பெண்களுக்கு பணி திறன்களை வளர்த்து கொள்வதற்கான வாய்ப்புகளை நிறுவனங்கள் வழங்க வேண்டும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு குடும்பத்திலுள்ளவர்களும் உதவியாக இருக்க வேண்டும். பணியிடங்களில் பன்மைத்துவம், நெகிழ்வுத்தன்மை, ஆகியவற்றோடு பெண்களின் பங்கெடுப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என கருத்து கணிப்பு நடத்திய நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share