இந்தியா கடந்த ஏழு ஆண்டுகளில் ரூ.38,000 கோடிக்கு அதிகமான ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது. விரைவிலேயே முழுமையான ஆயுத ஏற்றுமதி நாடாக மாறுவோம் என்று ஒன்றிய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இந்திய பாதுகாப்புத் துறை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை மாநாட்டில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அப்போது அவர், “பாதுகாப்பு தொழில் துறையில் சிறு நிறுவனங்கள் ஒன்றிய அரசின் முயற்சியால் சுமார் 12,000 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பாதுகாப்பு தொழில்துறையில் இணைந்துள்ளன. இந்த நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் மேலும் அதிக முதலீடு செய்ய வேண்டும். அது நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த உதவும்.
நீங்கள் புதிய தொழில்நுட்பங்கள், புதிய தயாரிப்புகளை கொண்டுவர வேண்டும். நாம் சிறிய நிறுவனம் என்பதால் நம்மால் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியாது என்று கருதக்கூடாது. நம் நாட்டின் வானவியல் மற்றும் பாதுகாப்பு தொழில்துறையின் மதிப்பு ரூ.85,000 கோடியாக உள்ளது. இதில் தனியார் துறையின் பங்களிப்பு ரூ.18,000 கோடியாக உயர்ந்துள்ளது” என்று கூறினார்.
மேலும், “ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகளால் கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி ரூ.38,000 கோடியை தாண்டியுள்ளது. தற்போது சுமார் 70 நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஆயுத தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆயுத ஏற்றுமதியில் இந்தியா உலகின் முதல் 25 நாடுகளில் ஒன்றாக உள்ளது.
வருகிற 2024-25ஆம் ஆண்டு அளவில் நம் நாட்டில் இருந்து ரூ.35,000 கோடிக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுமையான ஆயுத இறக்குமதி நாடு என்ற நிலையில் இருந்து, முழுமையான ஆயுத ஏற்றுமதி நாடு என்ற நிலையை நாம் விரைவில் அடைவோம்.
பாதுகாப்புத் துறையில் சுயசார்புக்கு இந்திய ஆயுதப் படைகள் முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றன. இதனால் இந்தத் துறையில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஒப்பந்தங்கள் அதிகரித்துள்ளன” என்று கூறியுள்ளார்.
**-ராஜ்**
.�,